• August 31, 2020
  • TMK Media

ஆதிக்குடிகளின் மொழி தமிழ் மொழியே; கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் : சிங்கள ஊடகத்துக்கு விக்னேஸ்வரன் துணிச்சலான பதில்

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் மொழி தமிழ் மொழியே என்றும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் அப்பாவி பொதுமக்களே என்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் ‘ஹிரு’ ஊடகத்துக்கு வழங்கிய சிங்கள நேர்காணலில் துணிச்சலான கருத்துக்களை மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஹிருவின் ‘Hard Talk ‘ நேர்காணலின்போது விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் கீழே:

கேள்வி : பாராளுமன்றத்தில் முதல் நாளிலேயே பூர்வீக நிலம் தொடர்பாக கூறியது ஏன்?

பதில் : நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்த நாட்டின் ஆதிக் குடிகளின் மொழி தமிழ் மொழியே என்பதனை நிரூபிக்க முடியும்.

கேள்வி : இந்த நேரத்தில் நீங்கள் அந்த கருத்தை கூறியது ஹன்சாட்டில் பதிவாவதற்காகவா?
பதில் : இல்லை , இல்லை. நேற்று , முந்தநாள் வந்த கள்ளத்தோணிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். எங்களைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : சிங்கள பாடசாலைக்கு சென்று சிங்கள பிரதேசத்தில் வழக்கு விசாரணைகளை நடத்தி , பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு திருமணம் முடித்துக்கொடுத்த உங்களுக்கு வயோதிபர் ஆனபின்னரா இந்த தமிழ் மொழி பற்றி கதைக்க வேண்டுமென்ற உணர்வு வந்தது?
பதில் : எமது மக்கள் அதனை தெரிந்தும் இதுவரை காலமும் கூறவில்லை. நான் நாளை அல்லது நாளை மறுநாளில் இறக்க உள்ளவன். எனக்கு கூற முடியும்.

கேள்வி : நீங்கள் அரசியல் செய்வதற்காகவும் , வாக்குக்காகவுமே நீங்கள் அந்த கதையை கூறியதாக நான் கூறினால்.
பதில் : வீதியில் செல்லும் ஒருவன் கூறினால் அதற்கு காது கொடுக்க மாட்டார்கள்தானே.

கேள்வி : ஏன் நீங்கள் தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னர் முள்ளிவாய்க்காலுக்கு போனீர்கள்?
பதில் : அந்த இடம் மிகவும் முக்கியமான இடமாகும். இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயம் என்று கூறி அந்த இடத்திற்கு கொண்டு வந்து அவர்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் ஐ.நாவுடன் கதைத்து என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதனால் அந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.

கேள்வி : அந்த இடத்தில் இருந்தவர்கள் பயங்கரவாதிகளே.
பதில் : ஒருபோதும் ஒருவர் கூட பயங்கரவாதி அல்ல. அங்கு இருந்தவர்கள் அப்பாவி மக்களே. பயங்கரவாதி என்று அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டுள்ளதா?
கேள்வி : பயங்கரவாதிகள் என நெற்றியில் எழுதப்பட்டிருந்ததா? என நீங்கள் கேட்கின்றீர்கள். அப்படியென்றால் அங்கு இருந்தவர்கள் அப்பாவிகள் என்று எழுதப்பட்டிருந்தா?

பதில் : அவர்களுடன் நாங்கள் கதைத்துள்ளோம் தானே. எங்களுக்கு தெரியும்தானே யுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்களுக்கு எந்தவித தொடர்பு இல்லையென்று.
கேள்வி : 80 வயதை கடந்த உங்களுக்கும் வாசுதேவுக்கும் ஒன்றாக பாராளுமன்றத்தில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அது மகிழ்ச்சியா?
பதில் : அவருடன் இருப்பது மகிழ்ச்சிதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லைதானே.
கேள்வி : சிங்கள கட்சிகளுக்கும் நாங்கள் விருப்பம் என்பதனை வடக்கு மக்கள் இம்முறை காட்டியுள்ளனர்தானே.

பதில் : இல்லை. அதனை சிங்கள சுதந்திரக் கட்சியாக மக்கள் பார்க்கவில்லை. அது அங்கஜன் இராமநாதனுக்கு கிடைத்தது.
கேள்வி : அங்கஜன் சுயேட்சைக் குழுவில் வந்திருந்தாலும் அவர் வென்றிருப்பார் என்றா கூற வருகின்றீர்கள்.
பதில் : இல்லை. அதேபோன்று இன்னுமொருவர் வந்தால் அவரால் முடியாது.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் குறைவடைந்துள்ளது.
பதில் : அவர்களிடம் கதைகள் மட்டும்தான் உள்ளது. வேறு எதனையும் செய்யவில்லை. இதுதான் காரணம்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து ஒன்றாக வேலைச் செய்வோம் என்று அழைப்பு வரவில்லையா?
பதில் : செல்வம் அடைக்கலநாதன் இது பற்றி கூறினார். ஆனால் தீர்மானம் ஒன்றுக்கு வரும் போது ஒன்றாக இறங்குவோம் என்று கூறினேன்.

கேள்வி : வடக்கு மக்களிடையே இருக்கும் பெரிய பிரச்சினையாக நீர்ப் பிரச்சினை இருக்கின்றது.
பதில் : பொருளாதார அபிவிருத்தி மாத்திரம் பிரச்சினை என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கு அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன.

கேள்வி : அரசியல் பிரச்சினையை தீர்க்க முன்னர் குடிக்க நீர் வேண்டும். தானே. இது பிரதான பிரச்சினை தானே. உங்களுக்கு வாசுதேவ நாணயக்காரவுடன் கதைத்து வடக்கிலுள்ள நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?
பதில் : அவருடன் இணைந்து செய்ய வேண்டிய பல வேலைகள் உள்ளன.

கேள்வி : அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்று வேலை செய்வீர்களா?
பதில் : ஆம். அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்று வேலை செய்ய நாங்கள் தயார்.