• July 18, 2020
  • TMK Media

இராணுவ பிரசன்னம் அதிகரித்துவருவது தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது : நீதியரசர் விக்னேஸ்வரன்

இம்முறை நடத்தவிருக்கும் தேர்தல் சரியாக, முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் கொரோனாவைச் சாட்டி இராணுவ பிரசன்னம் தற்போது அளவுக்கதிகமாக வட மாகாணத்தில் ஏற்பட வழி அமைத்திருப்பதேயாகும் என்று வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றுசனிக்கிழமை கிளிநொச்சி சந்தை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளுக்கு நாள் எம் மத்தியில் படையினர் தொகை அதிகரித்து வருகின்றது. எமது ஜனாதிபதி ஒரு முன்னைய இராணுவவீரர். எனவே வருங் காலம் எப்படி அமையும் என்பதில் பலத்த கரிசனை பலர் மத்தியில் இப்பொழுது எழுந்துள்ளது. இம்முறை நடத்தவிருக்கும் தேர்தல் சரியாக, முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் கொரோனாவைச் சாட்டி இராணுவ பிரசன்னம் தற்போது அளவுக்கதிகமாக வட மாகாணத்தில் ஏற்பட வழி அமைத்திருப்பதேயாகும்.

2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட போர்சார்ந்த சமநிலை என்ற சர்வதேச போர் முறைத் திறன் ஆராய்வு நிறுவனத்தின் அறிக்கைப் படி இலங்கையானது 255000 செயலூக்க அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது என்றும் அதே காலகட்டத்தில் பிரித்தானியா 146390 அங்கத்தவரையும், இஸ்ரேல் 168550 அங்கத்தவரையும், பிரான்ஸ் 203910 அங்கத்தவரையும், சவூதி அரேபியா 227000 செயலூக்க அங்கத்தவர்களையுங் கொண்டிருந்தன என்றும் கூறுப்பட்டுள்ளது. எனவே எமது சிறிய நாடு எந்தளவுக்கு படை பலம் பெற்றுள்ளது என்று காணக் கூடியதாக உள்ளது.

கொள்கை ஆராய்வு நிறுவனமான யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்ற நிறுவனம் 2017 ஒக்டோபர் மாதத்தில் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ வீரர்களின் தொகை 60000 என்றும் இது முல்லைத்தீவில் 2 சாதாரண மக்களுக்கு ஒரு படைவீரர் என்ற விகிதத்தில் அமைகின்றது என்றும் உலகத்தில் வெகுவாக இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முல்லைத்தீவும் ஒன்று என்று கூறியது.

கனடாவில் இருந்து வருகை தந்த John Tory என்ற நகரபிதா என்னுடன் முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணம் செய்து வந்த போது முல்லைத்தீவில் காணுமிடமெல்லாம் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதைப் பார்த்து இங்கு யுத்தம் முடிவடையவில்லையா என்று கேட்டார். அப்போது போரின் பின் 9 வருடங்கள் கழிந்த நிலையில் ஏன் இவ்வளவு படைமுகாம்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்கள்.

அந்த நிலை மாறவில்லை. மாறாக இன்னமும் விரிவடைந்து வருவதை நாம் இன்று பார்க்கின்றோம். உண்மையில் 60000 போர் வீரர்கள் அக்காலகட்டத்தில் முல்லைத்தீவில் நிலை கொண்டிருந்தார்கள் என்று கூறினாலும் இத் தொகை இராணுவப் பிரசன்னத் தொகையே என்றும் இலங்கை கடற்படை, ஆகாயப்படையினர் பற்றிய தக்க தகவல்கள் கிடையாமையால் படையினர் தொகை 60000 ஐயும் மிஞ்சியிருந்தது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர் இல்லாத ஒரு பிரதேசத்தில் இந்தளவு படையினர் பிரசன்னத்திற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

பல சர்வதேச நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் போன்றவை இலங்கையில் போரின் பின்னர் படைக் குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்ட பின்னரும் இலங்கை செவி சாய்க்காது இருப்பது ஏன்?

இவ்வாறான செயல்கள் மூலம் தமிழ் மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு அவர்களை எதிர் வினையில் ஈடுபடவைத்து அதைச் சாட்டாக வைத்து தமிழர்களை நிர்மூலமாக்கும் திட்டம் எதுவும் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எவ்வளவு தான் படையினர் உங்களுக்கு நன்மைகள் செய்வதாகப் பாசாங்கு காட்டினாலும் அவர்கள் ஒரு அடிப்படைத் திட்டத்தின் அடிப்படையிலேயே வன்னியில் நிலைபெற்றுள்ளார்கள் என்பதை நாம் மறத்தல் ஆகாது. பல இளம் சகோதர சகோதரிகள் வறுமையின் நிமித்தம் இவர்களின் பிடிக்குள் அகப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்களே தெரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரத்தை நாம் வழங்க முன்வர வேண்டும்.

இதுபற்றி கூட்டமைப்பினர் எந்தவித கரிசனையையும் இதுவரை காட்டாதது மனதுக்கு வருத்தமாக உள்ளது. இன அழிப்பு என்பது தமிழ் மக்களைக் கொல்வது மட்டும் அல்ல. கலாசார இனவழிப்பு, கல்விசார் இன அழிப்பு, பொருளாதார இன அழிப்பு,

கட்டமைப்புக்களின் இன அழிப்பென்று பல இன அழிப்புக்கள் உண்டு. இவ்வாறான பல வித இன அழிப்பு நடவடிக்கைகள் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை அறிஞர்கள் பலர் வெளிக்காட்டியுள்ளார்கள்.

எம்மைக் கண்காணிக்கும் படையினரில் 99 சதவிகிதமானவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எம்முடன் பழகும் பொலிசாரில் 95 சதவிகிதமானவர்கள் அதே பெரும்பான்மையினர். இதன் அர்த்தமென்ன? பெரும்பான்மையினருக்கு எம்மிடையே எதையும் நிகழ்த்த, எதையும் செய்ய, எதைச் செய்தாலும் அதற்கான பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களை விடுபடச் செய்ய. சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாடெங்கும் இராணுவ சர்வாதிகாரம் வரப் போகின்றதென்று பெரும்பான்மையினர் அச்சம் கொண்டுள்ள நேரத்தில் வடக்குக் கிழக்கில் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை. பலருக்கு இது விளங்கவில்லை.

இராணுவ சர்வாதிகாரம் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப் படப்போவது மற்றைய மாகாணங்களில் ஏற்படுத்தப் போகும் அதே காரணங்களுக்கு அன்று. மற்றைய ஏழு மாகாணங்களிலும் நிர்வாக சீர் திருத்தத்துக்காகவும் ஊழலை ஒழிக்கவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பௌத்த சமய வலுவாக்கலுக்காகவும் சர்வாதிகாரம் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் வடக்கு கிழக்கில் பின்வரும் காரணங்களுக்காகவே சர்வாதிகாரம் பயன்படுத்தப்படலாம் என்று கொள்ள இடமிருக்கின்றது.
1. தமிழர் காணிகளைக் கபளீகரம் செய்வதற்கு
2. அந்தக் காணிகளில் சிங்களமயமாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு
3. ஆனால் அந்த சிங்கள மயமாக்குதலுக்கு பாவிக்கப் போகும் அவர்களின் யுக்தி பௌத்த மயமாக்கலாகும் தமிழரின் பௌத்தகாலத்து தொல்லியல் எச்சங்களை பௌத்த சிங்கள எச்சங்களாகக் காட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண ஜனாதிபதி செயலணி அதற்காகவே நியமிக்கப்பட்டுளது.

இவ்வாறு செய்தால் என்ன நடக்கும்?
1. பிறநாடுகளுக்குத் தமிழர்கள் வெளியேறிச் செல்லலாம். அல்லது நாட்டின் மற்றைய பிரதேசங்களுக்குச் சென்று குடியேறலாம்.
2. தொடர்ந்திருந்து இராணுவ ஆட்சியின் கீழ் 2ந் தர 3ந் தர பிரஜைகளாக வாழலாம்
3. எதிர்த்து சிறைகளில் அடைபடலாம் அல்லது தடை முகாம்களில்; காலத்தை கழிக்கலாம் அல்லது
4. முரண்டு பிடித்து சுட்டுக் கொல்லப்படலாம்.

இவை யாவையும் இனப்படுகொலையின் முக்கிய குணாம்சங்கள். ஒரு பிரதேசம் வாழ் மக்களை அங்கிருந்து பலாத்காரமாக அல்லது சூழ்ச்சியின் துணை கொண்டு அப்புறப்படுத்துவது இனப்படுகொலையின் அம்சமாகும்.

இதற்கு என்ன செய்யலாம்? எமது கட்சி இவை யாவற்றையும் உணர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எமக்கு மக்களின் அனுசரணையும் ஆதரவும் கிடைத்தால் எமக்கு அதிகாரம் தானாகவே கிடைக்கும். அந்த அதிகாரம் எம்மை எம் மக்களின் ஈடேற்றத்திற்கு உழைக்க உதவும். அந்த அதிகாரம் எம்மை பிறநாட்டு அலுவலர்களுடன் எம் மக்கள் சார்பில் கலந்துறவாட வழிவகுக்கும். அந்த அதிகாரம் எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராகத் துணிந்து நிற்க உதவிபுரியும். அந்த அதிகாரம் எமது நாட்டுக்குக் கொடைகள் வழங்கும் கொடையாள நாடுகளுடன் பேச உதவும் என தெரிவித்தார்.