• May 5, 2020
  • TMK Media

எத்தனை பேருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலை எடுத்துக் கொடுக்க முடிந்தது? விக்னேஸ்வரன் கேள்வி

கடந்த 5 வருடங்களாக ஒட்டுமொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாகவும் அரசாங்கத்தின் பகுதியாகவுமே செயற்பட்டு வந்திருந்தார்கள்.ஆனால் வேலை இல்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததா? எத்தனை பேருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலை எடுத்துக் கொடுக்க முடிந்தது? சில நூறு பேர்களை வேண்டுமானால் விரல் விட்டு எண்ணலாம். எனது முதலமைச்சர் காலத்தில் நாம் வேலை எடுத்துக் கொடுத்த தொகையினரிலும் குறைந்த தொகையினருக்கே அவர்கள் வேலை பெற்றுக் கொடுத்தார்கள். அத்துடன் வடக்கு கிழக்கின் பல வெற்றிடங்களுக்கு தென் இலங்கை மக்களே அவர்கள் பதவியிலே இருக்கும் போதே நியமனம் பெற்றிருந்தார்கள். இதனைக்கூடக் கூட்டமைப்பினால் தடுக்க முடியவில்லை. பல்லிளித்துப் பதவி பெறுவதில் இருக்கும் அதிகாரமற்ற தன்மை உங்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வேலையில்லா பட்டதாரி ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய பதிலில், “பட்டதாரிகளையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு லட்சம் இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். சிங்கள கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை நீங்கள் தெரிவுசெய்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்பு உள்ளடங்கலாக சில நூறு பேர்களுக்கு மட்டுந்தான் இவர்களால் வேலை பெற்றுக்கொடுக்க முடியும்.அதுவும் சிங்கள அரசாங்கத்திற்கு ‘சலாம்’ போட்டு இளித்து கேட்டுக் கொண்டால்த்தான் கிடைக்கும். அவர்கள் இங்கு செய்யும் அயோக்கியத்தனங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த கோவில் திறந்தால் அங்கு போய்ப் பாராட்ட வேண்டும். மணல் கள்ளமாக பிற மாவட்டங்களுக்குச் சென்றால் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும். சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்புக்களைக் கூட சிங்கள கட்சிகள் தமது பிரதிநிதிகளுக்கு ஊடாக வழங்கி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஏதோ வெட்டிப் பிடுங்கியுள்ளதாகப் பிதற்றுகின்றார்கள்.ஆகவே, சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதால் எமது மக்களின் வேலை இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்பெறாமல் வைத்திருப்பதற்கான சிங்கள அரசாங்கங்களின் உத்திகளில் எமது மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பது ஒன்று. இதனைச் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் அரசாங்கங்கள் செய்துவருகின்றன.

அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது பொருளாதாரத்தையும் வாழ்வையும் நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் நினைக்கின்றோம். பல வழிகள் எமக்கு இருக்கின்றன. எமது புலம் பெயர் மக்கள் இருக்கின்றார்கள். இன்று அநேகமான நாடுகள் திறந்த பொருளாதார சந்தையில் சங்கமம் ஆகி இருக்கின்றன. எமது நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகளிலும் அதிக வேலை வாய்ப்பு தனியார் துறையிலும் சுய தொழிலிலுமே ஏற்பட்டுள்ளன.இந்த வாய்ப்புக்களை எல்லாம் நாம் முயற்சி செய்துபார்க்காமல், சில நூறு பேர்களுக்கு அரசாங்க வேலையைப் பெற்றுக்கொள்வதற்காக எமது உரிமைகளை எல்லாம் கைவிட்டுவிட்டு சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அல்லது அக்கட்சிகளின் அடிவருடிகளுக்கு வாக்கு போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? கடந்த முப்பது வருடத்திற்கு மேலாக நண்பர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்றார். அவருடன் வேறும் சில தமிழ் அமைச்சர்களும் அரசாங்கத்துடன் இருந்துள்ளார்கள்.

எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் என்று இப்பொழுது கூட அவர்களுக்குத் தெரியுமா? முறையாகத்தகைமை அடிப்படையில் கட்சிபேதமின்றி வேலைகளைக் கொடுக்க அவர்கள் இது வரையில் முன்வந்துள்ளார்களா? நாம் வடமாகாணசபையில் இருந்த போது தகைமைக்கு இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலை அறிந்து பதவிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தோம்.எமது அரசாங்க சார்பு அரசியல்வாதிகள் நாங்கள் அவர்களுக்கு வாக்குப் போட்டால்த்தான் அவர்கள் வேலைகள் தருவார்களாம். இதைத்தானே அன்றும் இன்றும் சொல்லி உங்களை ஏமாற்றிப் பிழைத்து வந்துள்ளார்கள். தம்மையும் வளர்த்து வந்துள்ளார்கள். பொய் வார்த்தைகள் பேசி உங்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் வேலையில்லாப் பிரச்சனைக்கு எமது உள்ளூர்த் தீர்வுகள் பலவுண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

எமது அரசியல் தலைமைகள் இதுகாறும் எதையுமே செய்யவில்லை என்று நீங்கள் கருதக்கூடாது. அது உண்மை அல்ல. 30 வருடங்கள் யுத்தம் நடைபெற்றபோது, எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்டபட்டதாகவே இருந்தது. இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள்.ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களுக்குள் எமக்குத் தெளிவு இல்லாமல் போய்விட்டது. எமது குறிக்கோள்களை மறந்துவிட்டோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், எமது பிழைகளில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் சிறந்த உபாயங்களைக் கையாண்டு, எமது புத்தியைப் பயன்படுத்திச் செயற்பட்டால் எமது உரிமைகளை விரைவில் பெறுவதற்கான வழிகள் உள்ளன. ஆனால் கால வரையறையை விதிப்பது சிரமம். எம் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இறைவன் மேல் உங்களுக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும்.ஆகவே நாம் மீண்டும் எழுவோம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். ஒன்றுபடுங்கள். சலுகைகள் வேண்டாம். எமக்கு எமது உரிமையே வேண்டும் என்று சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் வழி நடக்க முன் வாருங்கள். உங்கள் உரிமைகள் விரைவில் கிடைப்பதாக! வேலைகளும் கிட்டுவதாக” என தெரிவித்துள்ளார்.