• July 6, 2020
  • TMK Media

கொலின் விளையாட்டுத் திடல் நெல்லியடியில் இன்று 05.07.2020 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்ட தலைவருரை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கருத்துப் பரப்புரைக் கூட்டம்
கொலின் விளையாட்டுத் திடல், நெல்லியடியில்
05.07.2020 அன்று மாலை 06.30 மணிக்கு
தேசியக் கூட்டணி தலைவருரை
குரூர் ப்ரம்மா……………………..
எனதினிய என் தமிழ் மக்களே!
அன்புள்ள மக்கள் உங்களுடனான கடந்த காலத் தொடர்புகள் பல தடவைகள் இருந்து வந்துள்ளன. அது நான் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில். இன்று வருகை தருவது ஒரு முக்கியமான கோரிக்கையை உங்கள் முன் வைக்க. எம் கட்சியின் சார்பில் மீன் சின்னத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்துள்ளேன். அதற்கான காரணங்கள் இப்போது மேலோங்கியுள்ளன.
இன்று ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக் குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வருந் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள். வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள்.அது போன்றதொரு காரியம் தான் இது. பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா? என்று சிலர் கேட்பார்கள்.
ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கோத்தாபயவும், மகிந்தவும், இரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள். சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தா தருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள் நல்வாழ்வு அன்று.
சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சரிப்படுத்திவிடுவார்கள். தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும் வருமானங்கள் வரச்செய்து எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை வாய்மூடச் செய்து விடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அவர்கள் தரும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை. எமது தமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக் கட்சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது.
பொருளாதார நன்மைகளைப் பெற்றுத்தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அது தான் இல்லை. தாம் நினைக்கும் திட்டங்களை, தமக்கு நன்மை தரும் திட்டங்களை மட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப் பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்களையே வகுப்பார்கள். செயல்ப்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றி சுத்தப்படுத்தி அணைகட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு பணம் இல்லை என்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில் அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள்.
மேலும் நாம் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்ட போது சகல அறிக்கைகளும் எமக்கு சார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்த செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார்.
ஆகவே தேசியக் கட்சிகள் எமக்கு வேலை தருவார்கள், பொருளாதார மேம்பாட்டைத் தருவார்கள் என்று எண்ணி அவர்களுக்கு வாக்களிப்பது வீண் வேலையாகும்.
அதே போல் அவர்களின் கைப்பொம்மைகளாக ஆடும் நுPனுP போன்ற கட்சிகளும் தமக்கு நன்மை தேடுவார்களே ஒளிய மக்கள் நலம் பார்க்கமாட்டார்கள். காரணம் அவர்களைத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதை அக் கட்சிகளை அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.
அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப் பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள். முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த கட்சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் கட்சிகள் சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை. தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.
அடுத்து சுயேட்சைக் கட்சிகள் 14 போட்டியிடுகின்றன. அவை யார் யாரோ சிலரின் தனிப்பட்ட நன்மைகளுக்காகப் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்கியல்ல. அவர்கள் எவருக்கும் வாக்களிக்காது விடுவது தான் நல்லது.
எனவே தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முன்வந்திருக்கும் கட்சிகள் இரண்டு. ஒன்று எம்முடையது. அடுத்தது சைக்கிள்காரர்களின். அன்றிலிருந்து அவர்களுக்கு சைக்கிளே முக்கியம். எமது மக்கள் அல்ல என்பது என் கருத்து. ஆகவே அந்த இளைஞர்களை அவர்கள் வயது வந்தபின் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது எங்கள் மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
எம்மைப் பொறுத்த வரையில் அரசியல், சமூகவியல், பொருளாதாரம் மூன்றிலும் நாங்கள் கொள்கைப் பற்றுள்ளவர்கள். எமது மக்களின் நல்வாழ்வுக்காகப் பல செயற்றிட்டங்களை எமது புலம் பெயர் உறவுகளுடன் சேர்ந்து நாம் தீட்டியுள்ளோம். அரசியல் சிந்தனைகளை முன்வைப்பதோடு சமூகப், பொருளாதார அபிவிருத்தி பற்றியும் நாம் சிந்தித்து செயலாற்ற உள்ளோம். அரசியலில் தன்னாட்சி, சமூகத்தில் தற்சார்பு, பொருளாதாரத்தில் தன்னிறைவு என்ற குறிக்கோள்களை முன்வைத்து உங்கள் முன் வந்துள்ளோம்.
அரசியல் ரீதியாக உலக நாடுகளின் அனுசரணையுடன் இலங்கையில் மக்கள் தீர்ப்பொன்றை வட கிழக்கு மாகாணங்களில் நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற்று, சர்வதேச அனுசரணை பெற்று, ஒரு தன்னாட்சி அரசியல் பின்னணியை உருவாக்குவNது எமது திட்டம். நாம் பொருளாதார ரீதியாக புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் தன்னிறைவு காண இருக்கின்றோம். ஏற்கனவே எமது நம்பிக்கைப் பொறுப்புக்கள் தமது வேலைகளைச் செவ்வனே செய்து வருகின்றன. அத்துடன் நாம் மக்களின் மனோநிலையைத் திடப்படுத்தி “எம்மால் முடியும்” என்ற உணர்வை அவர்களிடையே வலு ஏற்கச் செய்ய இருக்கின்றோம்.
எமது கட்சி ஒரு முழுமையான கட்சி. ஆகக் கூடிய கட்சிகளை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டு என்றால் அது எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். வடக்கையும் கிழக்கையும் இணைத்துப் பயணிக்கும் கட்சி எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். செயற்றிட்டங்கள், கொள்கைகள் கொண்ட கட்சி எமது தேசியக் கூட்டணியாகும். அரசியல் அனுபவம் மிக்கவர்களையும் புது முகங்களையும் சேர்த்து தேர்தலில் நிறுத்தியிருக்கும் கட்சி எமது தேசியக் கூட்டணியாகும். முரண்பாடுகள் இல்லாமல் எழுத்து மூல உடன்பாட்டின் வழியில் பயணிக்கும் கட்சி எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாகும். சோழச் சின்னம் மௌனித்துப் போக பாண்டிய சின்னமான மீன் சின்னம் வலுவுடன் எழுந்து நின்று எம்மக்களைக் காப்பாற்ற உறுதுணையாக இருக்கப் போவது எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மூலமாகவே. நீங்கள் யாவரும் தவறாமல் தேர்தல் நாளான்று அதிகாலையிலேயே எழுந்து ஆயத்தமாகி தேர்தலில் மீனுக்கு வாக்களிக்க வேண்டுகின்றேன். எமது கூட்டுக் கட்சி சுயநலம் நீத்து, பொது நலம் காத்து தமிழ் மக்களின் வருங்காலத்தை வளமான ஒரு இலக்கை நோக்கி எடுத்துச் செல்லும் என்று கூறி என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்
இணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி
தலைவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி