• June 30, 2020
  • TMK Media

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் நீதியரசர் ஆற்றிய உரை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
அங்குரார்ப்பணக் கூட்டம்
தொல்புரம், மோகன் அரங்கு,
வட்டுக்கோட்டை27.06.2020 அன்று மாலை 05.30 மணிக்கு

தலைவருரை

குருர் ப்ரம்மா ……………………………

எனதினிய தமிழ் உறவுகளே!

வட்டுக்கோட்டைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த புனிதப் பிரகாரத்தில் வழக்கம்பரை அம்மனின் அருட்பிரவாகம் பொங்கிப் பரவும் இந்தப் பிரதேசத்தில் எமது மீனாட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றேன். நாங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்ட இருக்கின்றோம் என்றால் அது அம்மனின் அருள் கிருபையின் காரணத்தினாலேயே. நாம் மீன் ஆட்சி செய்ய எமக்கு மீன் சின்னத்தை வழங்கியவள் அவள். எமக்கென ஒரு அரசியற் கூட்டை ஏற்படுத்த வழி வகுத்தவள் அவள். அரசியலுக்குப் புதியவர்களும் அரசியல் அனுபவம் மிக்கவர்களும் சேர்ந்து நாங்கள் இந்த அரசியற் கூட்டை அமைத்துள்ளோம். அதற்கு வழி கோலியவர் என்னை வழிநடத்தும் அந்த அம்மன் என்று கூறி அவளின் அருளை யாசித்து என் தலைவருரையைத் தொடங்குகின்றேன்.

எங்களைப் பலர் கேட்கும் ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதையே இந்தப் பேச்சின் கருவாக ஆக்க உள்ளேன்.

கேள்வி இது தான் – உங்கள் கூட்டணிக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? உங்கள் தனிச் சிறப்பு என்ன?

முதலாவது காரணம் எமது கூட்டணி கொள்கைபாற்பட்டது.
இரண்டாவது எங்கள் கூட்டணியில் அரசியலுக்குப் புதியவர்களும் இருக்கின்றோம். அந்த விதத்தில் எமது கட்சி புதியவர்களை அரசியல் அரங்கத்தினுள் உள்ளேற்க முன்வந்துள்ளது. அரசியலில் பல வருடகாலமாக ஈடுபட்ட பழுத்த அனுபவசாலிகளும் இருக்கின்றோம். அரசியல் அனுபவம் மிக்க நண்பர்கள் ஸ்ரீகாந்தா, சுரே~; பிறேமசந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோரைப் போல் அரசியலில் அனுபவம் மிக்கவர் திரு.அருந்தவபாலன் அவர்கள். அவர் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர். நானும் அனந்தியும் வடமாகாணசபை அரசியலில் இருந்து வந்தவர்கள். மற்றையவர்களான திருமதி மீரா அருள்நேசன் மற்றும் சிற்பரன், இரட்ணகுமார், சிவகுமார் ஆகியோர் அரசியலுக்குப் புதியவர்கள். ஆகவே அனுபவஸ்தர்களுடன் அரசியல்சார் புதுமுகங்களும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பது எமது சிறப்பியல்புகளில் ஒன்று.

மூன்றாவது எமது கூட்டணி ஒரு எழுத்து மூல உடன்பாட்டின் அடிப்படையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கொரோனாவின் தாக்கத்தால் எமது நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தாலும் இப்பொழுது நாங்கள் சுதாகரித்துக் கொண்டு எழுந்து நிற்கின்றோம். தேர்தலுக்கு 38 நாட்களே உண்டு. நாம் எழுந்து நிற்கின்றோம் என்றால் அது எமது கூட்டு முயற்சியின் வெற்றி என்றே கூற வேண்டும். வெறும் ஒன்றரை ஆண்டுகள் நிரம்பிய எமது தமிழ் மக்கள் கூட்டணி எம்முடன் சேர்ந்த நு.P.சு.டு.குஇ தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் சுயாட்சிக் கழகம், இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியோரின் ஒத்துழைப்பால் இன்று ஒரு பலத்த தேசியக் கூட்டணியாக பரிணமித்துள்ளோம்.

நான்காவது சிறப்பியல்பு நாங்கள் வெளிப்படையாக இயங்கும் ஒரு கூட்டணி. எமது கட்சியில் ஊழல் இல்லை. வெளிப்படைத் தன்மையுண்டு. இவ்வியல்புகளை மற்ற முக்கிய கட்சிகளில் நீங்கள் காணமாட்டீர்கள். எமக்குக் கிடைக்கும் பொதுப்பணம் யாவற்றிற்கும் கணக்கு வைத்துள்ளோம். கணக்கு காட்டுவோம். நாம் எமது சொத்து விபரங்களை மிக விரைவில் வெளிக் கொண்டு வருவோம்.

ஐந்தாவது சிறப்பியல்பு நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். ஆனால் மற்றவர்கள் செய்யும் கபடமான, பிழையான விமர்சனங்களுக்குப் பதில் அளித்தே தீரவேண்டும் என்ற கருத்தும் கொண்டவர்கள் நாங்கள். அடித்தால் அடிப்போம். நாங்களாக அடிக்க மாட்டோம்.

அரசியல் ரீதியான எமது கொள்கைகளைப் பரிசீலித்தீர்களானால் வடகிழக்கு இணைப்பும் அங்கு சம~;டி ஆட்சி கொண்டு வர வேண்டும் என்பதுமே எமது குறிக்கோள். அதை அடைவதற்கு நாங்கள் செய்யவிருக்கும் நடவடிக்கை ஐக்கிய நாடுகள், வல்லரசுகள், புலம்பெயர் உறவுகள் ஆகியோரின் ஆதரவு பெற்று வடக்கு கிழக்கில் மக்கள் தீர்ப்பைப் பெற வைப்பது. எமது தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமக்கு சம~;டி வேண்டும் என்று கூறினால் அதனை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும். அதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவோம். இவ்வாறான மக்கள் தீர்ப்பு பல நாடுகளில் எடுக்கப்பட்டு அரசியல் பிரச்சனைகள் முன்னர் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை மனதில் வைத்து நாம் எமது தன்னாட்சிக்கான நடவடிக்கைகளில் இறங்க இருக்கின்றோம்.

அடுத்து எமது மக்களின் மனோநிலையை மாற்ற இருக்கின்றோம். அரசாங்க உத்தியோகம், அரசாங்க உத்தியோகம் என்று எமது இளைஞர்கள் அலைவதை நாம் நிறுத்த வேண்டும். எவ்வளவு சிறிய வேலையென்றாலும் அரசாங்க வேலையொன்று இருந்தால்த்தான் அவ்வாறான இளைஞர்களை நாம் எமது மகள்மாரைத் திருமணம் செய்ய விடுவோம் என்ற பெற்றோரின் சிந்தனைகளை மாற்ற எத்தனிப்போம். ஓய்வூதியத்திற்காகத்தான் பெற்றோர்கள் அரசாங்க உத்தியோக மாப்பிள்ளைகளைத் தேடுகின்றார்கள் என்றால் தற்பொழுது காப்புறுதி ஸ்தாபனங்கள் ஒருவர் ஓய்வு பெற்று மரணிக்கும் வரையில் ஓய்வூதியம் பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

திரும்பவும் எமது இளைஞர் சமுதாயம் எமது காணிகளிலும், கடலிலும் முழு மூச்சுடன் வேலையில் ஈடுபட நாம் முன்வர வேண்டும். கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும். ஆனால் புதிய விஞ்ஞான ரீதியான யுக்திகளை விவசாயத்திலும் மீனவத் தொழிலும் மற்றும் கைத்தொழில்களிலும் உட்புகுத்த வேண்டும். பழைமையும் புதுமையும் ஒன்று சேர வேண்டும். வேலையில்லாமல் இருக்கும் அத்தனை இளைஞர் யுவதிகளும் உரிய திணைக்களத்தில் வேலைக்காகப் பதிவு செய்து கொள்ளும் அதே வேளை தமது நேரத்தை வீணாக்காது வீட்டுத் தோட்டங்கள், கோழி – வாத்து வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என்று பயன்தரும் வேலைகளில் ஈடுபடப் பழகிக் கொள்ள வேண்டும். நாங்கள் எங்கள் கைகளை நம்பி வாழப் பழக வேண்டும். எமது படித்த இளம் பெண்களும் சுயவேலைகளில் ஈடுபடும் இளைஞர்களைத் திருமணம் செய்ய முன்வரவேண்டும். எனவே தற்சார்பை நாங்கள் ஒரு கோட்பாடாக எமது மக்களிடையே நிலைநிறுத்த உத்தேசித்துள்ளோம்.

வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளுக்குப் பணம் அனுப்புபவர்கள் பயன் பெறுநர் ஏதாவது ஒரு இலக்கை அடைந்தால்த்தான் உதவி கிடைக்கும் என்று தமது உறவுகளுக்குக் கூற வேண்டும். உதாரணத்திற்கு “குறிப்பிட்ட பரீட்சையைப் பாஸ்பண்ணு; பணம் தருகின்றேன்” என்று கூறலாம். க~;டப்பட்டு புலம் பெயர்ந்தோர் பணம் அனுப்ப டாம்பீக வாழ்க்கையில் எமது இளைஞர்கள் பலர் இங்கு ஈடுபடுவது கவலைக்குரியது. வன்முறைக் கும்பல்களில் இவ்வாறான உதவி பெறும் இளைஞர் யுவதிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

எந்த ஒரு மக்கள் சார்பான அரசாங்கமும் தமது நாடு நல்ல நிலை அடைய வேண்டும் என்று தான் நினைக்கும். அந்த விதத்தில் எமது நாடு தன்னிறைவு அடைவது ஒரு முக்கியமான விடயம். உலகமயமாக்கல் சித்தாந்தப்படி எந்த ஒரு பொருளும் குறைந்த விலையில் ஒரு நாட்டில் கிடைத்தால் இன்னொரு நாடு அதை வாங்க வேண்டுமே ஒளியத் தானாக அதனை அதிகூடிய விலையில் விளைவிக்கவோ, அமைக்கவோ, உருவாக்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால் அது மூடத்தனம் என்று கருதுகின்றது. உலோகாய பார்வையில் அது சரிபோல் தெரிகின்றது.

ஆனால் அந்த சித்தாந்தம் கொரோனா வைரசால் கேள்விக்குரிய தாக்கப்பட்டுள்ளது. போர் அல்லது பாரிய நோய்ப் பரவல் வந்தால் எம்மால் மற்ற நாடுகளுடன் உரியவாறு தொடர்பு வைத்துக் கொள்வது முடியாத காரியம் ஆகிவிடும். ஆகவே நாம் எமது பிரதேசங்களில், மாகாணங்களில், நாட்டில் தன்னிறைவைக் கொண்டுவரப் பிரயத்தனங்கள் எடுக்க வேண்டும். எந்த ஒரு பசி, பட்டினி வந்தாலும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இதனால்த்தான் எமது கூட்டணி தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது.

நாம் நினைத்ததை எப்படியாவது அடையவேண்டும் என்பதிலும் பார்க்க இருப்பதை விருத்தி செய்து எவ்வாறு எமது இலக்குகளை அடையலாம் என்று சிந்திப்பது பிழையான காரியமல்ல. இதை நாம் உணரவேண்டும். நினைத்ததை மட்டுமே அடைய வேண்டும், அடையலாம் என்பது ஆணவம். சமயோசிதமாக முன்னேறுவது தகுந்த வழி காணுந் திறமை. இத் திறன் அகந்தைபாற்பட்டதல்ல. பகுத்தறிவுபாற்பட்டது.

ஆகவே அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எம் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாம் நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். ஆசிரியர்கள் பலரையும் மேலும் தொழில் ரீதியாக முக்கியமான தொழில்களில் ஈடுபட்டவர்களையும், அரசியலில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்களையும் எமது கூட்டணி வேட்பாளர்களாகக் கொண்டுள்ளோம். அவர்களுள் தக்க மூவரைத் தேர்ந்தெடுக்க உங்களிடம் வேண்டுதல் விடுக்கின்றேன். முதலில் மீனுக்கு புள்ளடி போடவேண்டும் என்றும் அதன் பின் நீங்கள் விரும்பிய மூவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நினைவுறுத்தி எமது கூட்டணி அலாதியான வெற்றி அடையப் பிரார்த்தித்து என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன்.
நன்றி

வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை
தலைவர், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி