தமிழ் மக்கள் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ எந்த வேளையும் தாக்குதல் நடக்கலாம்: கறுப்பு ஜூலை செய்தியில் விக்னேஸ்வரன்
நாட்டில் இன்று நிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்த சூழ்நிலையும் ஒரே விதமாகவே காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுகின்றது என்றும் தமிழ் மக்கள் மீதோ அல்லது முஸ்லிம் மக்கள் மீதோ எவ்வேளையும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
கறுப்பு ஜூலை தினமான இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒண்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்று தென்னிலங்கையில் ஒருகையில் வாக்காளர் பட்டியலையும் மறுகையில் கத்திகள், கோடரிகள், வாள்கள் என்பவற்றுடன் வீடு வீடாகச் சென்று தமிழர்களை வெட்டியும் எரித்தும் கொன்றொழித்த நாள். தமிழர்களின் உடைமைகளைத் தீயிட்டும் சூறையாடியும் சிங்கள பௌத்த பேரினவாதம் தாண்டவமாட வழிவிடப்பட்ட நாள். விடுதலை வீரன் குட்டிமணி தனக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தனது கண்களைத் தானம் அளிக்கும்படியும் அப்போது மலரப்போகும் தமிழீழத்தைத் தனது கண்கள் காணும் என்று கூறியதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிங்களக்காடையர்களால் அவரின் கண்கள் பிடுங்கப்பட்ட நாள். குட்டிமணியுடன் தங்கதுரை உட்பட சிறையிலிருந்த 53 அரசியற் கைதிகள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் மக்களுக்கெதிராக நிறுவனப்படுத்தப்பட்ட தொடர் இனக்கலவரங்களான 1956,1958, 1977, 1981 வன்முறைகளின் உச்சகட்டமாக இன அழிப்பு நடைபெற்ற ஏழு நாட்களின் தொடக்கநாள். 1983ம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் வன்முறைகளில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். தெற்கில் எஞ்சியிருந்த தமிழர்கள் வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்துக்கு விரட்டப்பட்டார்கள். நான் அப்போது மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மானிப்பாய் போன்ற இடங்கள் ஊடாக இராணுவ வாகனங்களில் வந்தோர் வீதியில் கண்ட மக்களை வகை தொகையில்லாமல் சுட்டுச் சென்றது சம்பந்தமாக மரண விசாரணைகள் நடத்த எவரும் முன்வராத நிலையில் நான் நடத்தியமை இப்போதும் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. அவ்வாறு நடத்தியதால் ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரரான ஜனாதிபதி சட்டத்தரணி ர்.று.ஜயவர்தன அவர்களின் கோபத்திற்கு ஆளானேன்.
இந்த உச்சகட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறைதான் எமது இளைஞர்களை முழு அளவிலான ஆயுதப்போராட்டத்துக்கு நிர்ப்பந்தித்து வடக்கு கிழக்கில் ஒரு நிழல் அரசை உருவாக்குவதற்கு வழிகோலியது. பல்லாயிரக்கணக்கான எமது மக்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தி இந்த நிழல் அரசும் 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இவை எல்லாமே சிங்கள பௌத்த பேரினவாத மேலாண்மையை நாடு முழுவதும் நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் காலம் காலமாக நன்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனப்படுகொலை நிகழ்வுகளாகும்.
இதனை வட மாகாண சபையின் ஊடாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு இனவழிப்பு ஆவணமாக உருவாக்கி சர்வதேச விசாரணைக்கான எமது போராட்டத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.
இன்று நிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்த சூழ்நிலையும் ஒரே விதமாகவே காணப்படுகின்றன. 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையூடாக சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று காணப்பட்டமையே அன்றைய இனக்கலவரத்துக்கு வழிகோலியது. அதேபோல, இன்றும் அதே நிறைவேற்று ஜனாதிபதி தெரிவுக்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுகின்றது. சிங்கள பௌத்த துறவிகள் எதற்கெடுத்தாலும் இரத்த ஆறு ஓடும் என்று அச்சுறுத்துவது மீண்டும் எம்மீதோ அல்லது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீதோ எவ்வேளையும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என்பதையே கட்டியம் கூறி நிற்கின்றது.
எனதருமை மக்களே! இலங்கை அரசுடன் பேசுவதாலோ அல்லது இலங்கைக்குள் பேசுவதாலோ எமக்கான உரிமையை நாம் என்றுமே பெற்றுவிட முடியாது என்பதையே வரலாறு எமக்கு இடித்துரைக்கின்றது. எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமான பரிகார நீதிக்கூடாகவே எமது உரிமைகளை நாம் அடைய முடியும். இதற்கு நேர்மை, விலைபோகாத் தலைமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் நிறுவன ரீதியான செயற்பாடுகளே அவசியமாக இருக்கின்றன. இதற்கான ஒரு அடித்தளத்தை இடுவது எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் முக்கியமானதாக இருக்கும். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் நாம் வேண்டுகின்றோம்.
இன்றைய இந்த நாளில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் எமது அஞ்சலிகளை செலுத்துவதுடன் எமது எதிர்கால சந்ததியினர் வளமான, பாதுகாப்பான வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் உரிமைகளுடன் வாழ வழிசெய்யும்வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற இன்று உறுதிபூணுவோமாக.