• December 10, 2020
  • TMK Media

புலிகள் மக்களை கேடயமாகப் பாவித்தார்கள் என்றால் அரசாங்கம் ஏன் சர்வதேச விசாரணைக்கு தயங்குகிறது? பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் கேள்வி

பொதுமக்களைப் புலிகள் கவசமாகப் பாவித்தார்கள் என்றும் அரசாங்கப்படையினரே பொதுமக்களைக் காப்பாற்றினார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். இந்த அரசியல்வாதிகள் கூறுவது உண்மையென்றால் எமது மக்கள் 2009ம் ஆண்டின் பின்னர் வந்த தேர்தல்கள் யாவற்றிலும் நன்றி அறிதலுடன் அரசாங்கக் கட்சிகளுக்கே வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் உங்களால் புலிகளின் பதிலி என்று அழைக்கப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். முதலாவது வடமாகாண சபைத் தேர்தலில் எனக்கு எப்படி 133,000 க்கு மேலதிகமாக வரலாறு காணாத அளவிற்கு வாக்களித்தார்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதியமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. மாறாக ஒரே நாட்டினுள் தாம் வாழும் இடங்களில் அவர்களுக்கிருந்த இறைமை பறி போகப் போகின்றதே என்று தான் ஆயுதம் தாங்கினார்கள். தமது தனித்துவத்தைத்தாமே பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் நடந்தது என்ன? அவர்களைப் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டி இருபதுக்கு மேலான நாடுகளின் உதவிகளைப் பெற்று அவர்களைக் கொடூரமாகக் கொன்றொழித்தீர்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களின் இன்றைய மிக முக்கிய எதிர்பார்ப்புத்தான் நீதி கிடைக்க வேண்டும் என்பது, முக்கியமாக தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடனும் அவர்களின் வருங்காலத்துடனும் பின்னிப்பிணைந்திருப்பது நீதி என்பதேயாகும். அவர்கள் போரின் கடைசி நேரத்தில் கட்டுப்பாடின்றி கொடூரமுறையில் கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் சார்பில் நீதி வேண்டி நிற்கின்றனர். தம் மத்தியில் இருந்து கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக அவர்கள் நீதி வேண்டி நிற்கின்றார்கள்.

எமது அரசியற்கைதிகள் வெகு நீண்ட காலமாக நீதி வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றனர். எமது முஸ்லீம் சகோதரர்கள் தம்முள் ஒருவர் நீதி அமைச்சராகத் தற்போது இருக்கும் போது கூட இறந்த தமது உறவுகளின் உடல்களைப் புதைக்க வேண்டும்என்று அனுமதிகேட்டு நீதி வேண்டி நிற்கின்றார்கள். எமது கத்தோலிக்க உறவுகள் 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ந் திகதி நடந்த குண்டு வெடிப்பில் இறந்துபோன தமது உறவுகள் சார்பில் நீதி வேண்டி நிற்கின்றார்கள்.

நீதியும் சமாதானமும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சமாதானத்தை அடைய வேண்டுமென்றால் முதலில் உடலால், உள்ளத்தால், அறிவால் மற்றும் பொருள் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். 1972ல் பாப்பாண்டவர் ஃபோல் அவர்கள் பின்வருமாறு கூறினார். “மனிதனை மதிக்காத சமாதானம் உண்மையான சமாதானம் அல்ல. மனிதனை மதிக்கும் மனப்பக்குவமே நீதி என்பது”என்றார். மேலும் அவர் “சமாதானத்திற்காகப் பாடுபடுபவர்கள் முதலில் நீதிக்காகப் பாடுபட வேண்டும்” என்றார்.

எனவே இன்றிருக்கும் இந்த அரசாங்கம் சமாதானத்தை வேண்டி நின்று நீதிக்காகப் பாடுபடுகின்றதா? அவ்வாறு நடக்க அரசாங்கம் உற்சாகம் எடுப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

உங்கள் சக குடிமக்கள் மீது உங்களுக்கு சிறிதளவாவது கரிசனை இருந்தால் இன்று வரையில் வறிய தமிழ் மக்களின் காணிகளைக் கையேற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கமாட்டீர்கள். தமிழ் மக்களின் தொல்பொருள் ஸ்தலங்களையும் பாரம்பரிய சின்னங்களையும் அழித்திருக்கமாட்டீர்கள். வட கிழக்கில் தமிழ் மக்களிடையே பெருவாரியான சிங்களப் படையணியினரை தொடர்ந்து இன்று வரையில் நிறுத்தியிருக்கமாட்டீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வகையற்றவர்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்குக் கரிசனை இருந்திருந்தால் அவர்களிடம் இருந்து எதனையும் பறித்திருக்கமாட்டாது. மாறாக உவந்து வந்து பரிந்து அவர்களுக்கு உதவிகள் புரிந்திருக்கும். சக மனிதர்கள் மீது இந்த அரசாங்கத்திற்கு கரிசனை இருந்திருந்தால் அவர்கள் யாவரையும் அன்புடனும் மதிப்புடனும் நடத்த முன்வந்திருப்பார்கள். ஆனால் நீங்கள் எங்களிடம் இருந்து எமது காணிகளை, பாரம்பரிய வாழ்வு முறைகளை மற்றும் எமது சுதந்திரத்தையும் பறிக்கவே நடவடிக்கைகள் எடுத்து வருகின்றீர்கள். எம்மை போரில் தோற்றவர்கள் போன்றே தொடர்ந்து நடத்தி வருகின்றீர்கள். எம்மைச் சக மனிதர்கள் என்று எண்ணி நீங்கள் நடப்பதாகத் தெரியவில்லை.

நாங்கள் எவரும் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் சுதந்திரம் என்ற தீபத்தை எம் மனதில் அணையாமல் இன்றும் ஏந்தி வருபவர்களே!

நீதி பற்றிக் கூறும் போது இந் நாட்டில் நாங்கள் அப்பாவி மக்களை மறந்து குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து பயணிக்கின்றோமோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏன் என்றால் 1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983ல் நடந்த தமிழ் மக்களுக்கெதிரான கலவரங்களில் அதன் போது நடைபெற்ற சித்திரவதை, கொலை, தீ வைத்தல் மற்றும் கற்பழித்தல் போன்ற குற்றங்கள் சம்பந்தமாக அவற்றைப் புரிந்த யாரேனும் ஒருவரையாவது இதுவரையில் குற்றவாளிகளாக்கியுள்ளோமோ? 97000 கிடைத்தற்கரிய நூல்களையும் சுவடிகளையும் கொண்டிருந்த யாழ் பொது நூலக எரிப்புக்காக யாராவது ஒருவரையாவது தண்டித்துள்ளோமா? அந்தக் காலத்தில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூலகம் என்று யாழ் நூலகம் பெயர் பெற்றிருந்தது. அண்மைக் காலத்தில் முஸ்லீம் சகோதரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்காக எவரேனும் ஒருவரை குற்றவாளியாக்கியுள்ளீர்களா? பொறுப்புக் கூறலுக்காக ஏதேனும் வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றீர்களா? தொடர்ந்து வந்த அரசாங்கங்களிடம் கையளிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பலவற்றின் அறிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தீர்களா?எல்லா அறிக்கைகளும் அலமாரிகளில் படுத்துறங்குகின்றன.

முஸ்லீம் அமைச்சரும் தமிழ் அமைச்சரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் சகல அதிகாரங்களும் பெரும்பான்மையினரின் கைகளிலேயே இருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களிலும் எதைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சிங்களப் பெரும்பான்மையினரே. நாடு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் இவ்வாறு தான் நிலைமை இருந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தில் குறிப்பிட்டபடி அனைவருக்குமான நீதி என்பது இந்த நாட்டில் இல்லை. இன ரீதியான பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது.

இன்று இந்த நாட்டில் ஒரு விசித்திரமான அரசியல் கலாசாரம் உதித்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் இழைத்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருவதே இந்நாட்டின் அரசியல் கலாசாரமாக மாறிவிட்டது.

இந்தக் கலாசாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் புகுந்துள்ளது. அதனால்த்தான் கற்றறிந்த எமது பாராளுமன்றத்தினர் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சிறுபான்மையினர் பேசுவதைத் தடைசெய்ய முன்வந்துள்ளார்கள். சிறுபான்மையினர் உண்மையைக் கூறி உறுப்பினர்களதும் அரசாங்கத்தினதும் பொட்டுக் கேடுகளை வெளிப்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களுக்கெதிராகவும் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இனவாதமானது இன்று கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இனவாதம் ஒரு சித்தாந்தமாகப் பரிணமித்துள்ளது. நாடெங்கிலும் மூலமுடுக்குகளில் எல்லாம் இந்த இனவாதச் சித்தாந்தம் விதைக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க திணைக்களங்கள் இதற்காகக் கருவிகளாகப் பாவித்துவரப்படுகின்றன. பாராளுமன்றத்தில் எம்மைப் பேசாது தடுக்கும் உறுப்பினர்களும் இந்த இனவாத சித்தாந்தத்தையே பின்பற்றுகின்றார்கள். ஊடகங்கள் கூட அவர்களின் இந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தக் கருவிகளாகப் பாவிக்கப்படுகின்றன. ஆனால் இனவாதம் எம்மை எங்கும் கொண்டு செல்லப் போவதில்லை. உண்மையில் இவ்வாறான சித்தாந்தங்கள் நாட்டைப் பேரழிவுக்குள்ளேயே தள்ளிவிடப் போகின்றன.

நீதி அமைச்சின் இணையத்தளத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது“பூகோள முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் அபிலாi~களின் அடிப்படையில் தேவைப்படும் சமூக ரீதியான தேவைகளை சட்ட மறுசீரமைப்பானது பிரதிபலிக்கும்” என்று கூறி அதுவே அவர்கள் குறிக்கேள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிக்கோள் நோக்கி நாங்கள் செல்ல விழைகின்றோமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டில் எமது பயணம் எதிர்த்திசையில் பயணம் செய்வதாகவே தோன்றுகின்றன. உலகமானது தனிமனித உரிமைகள் மேம்பாட்டுக்காகவும், சமூகங்களின் கூட்டு உரிமைகளுக்காகவும், நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் செல்லவிழைந்துள்ளது. அவ்வாறே அவர்கள் பாராளுமன்றங்களில் சட்டங்களையும் இயற்றுகின்றார்கள். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? குறிப்பிட்ட இந்நாட்டு இனங்களின் உரிமைகளையும், ஆதனங்களையும் அரசாங்கம் பறிக்கும் அல்லது கையேற்கும் வகையில்த்தான்; நடந்து கொண்டு வருகின்றோம். இந்த குறிப்பிட்ட இனங்களின் காணிகளைக் கையேற்று அவர்களின் கலாசார மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையையே அழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது இன்றைய அரசாங்கம்.

அவ்வாறு இல்லை என்றால் வடக்கு கிழக்கைப் பாதிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டது எதற்காக? தான்தோன்றித் தனமாக அப்போதைக்குத் தேவையானபடி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தொல்லியல் சிங்கள பௌத்த சின்னங்களைப் பாதுகாப்பதாகக் கூறி எம் மக்களின் காணிகள் கையேற்கப்பட்டு வருகின்றன. பௌத்த சின்னங்கள் வடக்கு கிழக்கில் இருப்பது உண்மை. அவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த காலத்தவை. சிங்கள மொழி பிறக்க முன்னரே தமிழர்கள் பௌத்த மதத்தைப் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த காலத்து பௌத்த சின்னங்களைப் பாதுகாப்பதாகில் நீங்கள் பெரும்பான்மை தமிழ் ஆணைக்குழு அங்கத்தவர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்hத படியால் தமிழர்களின் காணிகளைக் கையேற்று சிங்கள மக்களுக்கு அவற்றைத் தாரை வார்ப்பதே உங்கள் எண்ணமா? அதற்காகத்தான் மேற்படி ஆணைக்குழுக்களை அமைத்தீர்களா? வடக்கு கிழக்கைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றால் 3000 வருடங்களுக்கு மேலாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அனுமதியுடனும் ஒப்புதலுடனுமே அவை எடுக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. மாறாக ஒரே நாட்டினுள் தாம் வாழும் இடங்களில் அவர்களுக்கிருந்த இறைமை பறி போகப் போகின்றதே என்று தான் ஆயுதம் தாங்கினார்கள். தமது தனித்துவத்தைத்தாமே பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் நடந்தது என்ன? அவர்களைப் பயங்கரவாதிகள் என்று பெயர் சூட்டி இருபதுக்கு மேலான நாடுகளின் உதவிகளைப் பெற்று அவர்களைக் கொடூரமாகக் கொன்றொழித்தீர்கள்.

நாங்கள் ஒரு விடயத்தை முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மிகவும் முக்கியமானது. இது தான் தற்போதைய சர்வதேசக் கருத்தாகும். ஆகவே நாட்டின் இறைமையை முன்னிறுத்தி மக்களின் இறைமையை அழித்துவிடலாம் என்று நாம் எம்மை ஏமாற்றாது இருப்போமாக! 18ம் நூற்றாண்டின் அரசியல் சித்தாந்தமாகிய நாட்டின் இறைமை என்பது தற்போது சர்வதேச நாடுகளால் முக்கியமாகக் கருதப்படவில்லை. அதாவது ஒரு நாட்டின் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுமானால் நாட்டின் இறைமையைக் கவனத்திற்கு எடுக்காதுவிடலாம் என்று கூறப்படுகின்றது. அதுவே நவீன கருத்தாகும்.

சிங்கள அரசியல்வாதிகள் பலரின் வாதத்தில் இருக்கும் ஒரு முரண்பாடு பற்றி அடுத்து நான் பேசவேண்டியுள்ளது. பொதுமக்களைப் புலிகள் கவசமாகப் பாவித்தார்கள் என்றும் அரசாங்கப்படையினரே பொதுமக்களைக் காப்பாற்றினார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே தான் போர்க்குற்றங்களை அவர்கள் புரியவில்லை என்றும் மக்கள் சேவையையே அவர்கள் செய்தார்கள் என்றும் கூறுகின்றார்கள். அப்படியானால் தற்போது புலிகள் இல்லாத காலத்தில் மக்கள் அல்லவா அதனை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் மக்கள் கூறுவது என்னவென்றால் படையினர் தமது உறவுகளைக் கொடூரமாகக கொன்று குவித்தார்கள் என்று. இந்த அரசியல்வாதிகள் கூறுவது உண்மையென்றால் எமது மக்கள் 2009ம் ஆண்டின் பின்னர் வந்த தேர்தல்கள் யாவற்றிலும் நன்றி அறிதலுடன் அரசாங்கக் கட்சிகளுக்கே வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் உங்களால் புலிகளின் பதிலி என்று அழைக்கப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். முதலாவது வடமாகாண சபைத் தேர்தலில் எனக்கு எப்படி 133,000 க்கு மேலதிகமாக வரலாறு காணாத அளவிற்கு வாக்களித்தார்கள்? அதுவும் நான் அரசியலுக்கு அப்போது ஒரு புது முகமாக இருந்தேன்.

மேலும் புலிகள் மக்களை கேடயமாகப் பாவித்தார்கள் என்றும் மக்களை காப்பாற்றியது தமது போர் வீரர்களே என்று அரசாங்கம் கூறுவது உண்மை என்றால் எதற்காக எமது அரசாங்கம் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு முகம்கொடுப்பதற்கு பின்நிற்கின்றது? நீங்கள் கூறுவது உண்மை என்றால் அதனை விசாரணையின் போது நிரூபித்து உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாமே. அப்படி விடுபட்டால் நீங்கள் உலக நிறுவனங்களின் முன்னிலையில் நெஞ்சை உயர்த்தி வலம்வரலாமே!

ஆனால் உண்மை அதுவன்று. நீங்கள் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாக இருப்பதால்த்தான் நீங்கள் சர்வதேச விசாரணைகளில் பங்குபற்ற மறுத்து வருகின்றீர்கள். சர்வதேச விசாரணைகளைப் புறக்கணித்து சீனாவுக்குப் பின்னால் ஓட எத்தனிப்பது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன, மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் புரியப்பட்டன, இனப்படுகொலைகள் நடைபெற்றன என்பன அனுமானிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.

அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஐக்கியநாடுகளுக்கு நாங்கள் முகம் கொடுக்;கவேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் பொறுமைக்கு எல்லை உண்டு என்பதை மறக்காதீர்கள். மார்ச் மாத மாரக காலம் விரைவில் வர இருக்கின்றது! அதில் இருந்து தப்புவது மிகக் கடினமாகும்.

ஆனால் உங்;களுக்கு ஒரு மார்க்கமுண்டு. அரசாங்கம் புதியதொரு அரசியல் யாப்பைக் கொண்டுவர இருக்கின்றது. அப்போது அரசாங்கமானது ஒரு சம~;டி அரசியல் யாப்பையோ, பகுதி சம~;டி அரசியல் யாப்பையோ, கூட்டு சம~;டி அரசியல் யாப்பையோ ஏற்று அதன் மூலமாக இந்நாட்டில் உள்ள சகல இனங்களும் சம உரிமைகளுடனும் ஒற்றுமையுடனும் சுதந்திரத்துடனும் மேலும் சுகவாழ்வுடனும் வாழ இடமளிப்பீர்களாக! உங்கள் அரசாங்கத்தால்த் தான் இது முடியும். இராஜபக்ச குடும்பமானது வட கிழக்கு மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் முற்றும் முழுதுமான அதிகாரப் பரவலை உறுதி செய்து, மலையக மக்களும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சமத்துவத்துடனும் சிநேகபூர்வமாகவும் வாழ இடமளிப்பீர்களாக!

இவ்வாறு நீங்கள் செய்யத் தவறினால் உலக நாடுகளின் தலைநகரங்கள் பலவற்றிற்கு போர்க் காலங்களில் போய் வந்தது போல் மேலும் போய் வரவேண்டி இருக்கும். ஆகவே இந்த அரசாங்கம் எமது இன முரண்பாடுகளைத் துருவப்படுத்தி சர்வதேச வல்லரசுகளை, இலங்கையில் அவை இதுவரையில் காலூன்றவில்லை என்றால், இனியும் காலூன்றாது தவிர்க்க நடவடிக்கைகள் எடுப்பீர்களாக என்றார்.