• November 11, 2020
  • TMK Media

மக்களின் விடிவு ஒன்றே எமது தாரக மந்திரமாக அமையின் ஒற்றுமை கட்டாயம் ஏற்படும் – நீதியரசர் விக்னேஸ்வரன்

மக்களின் விடிவு ஒன்றே எமது தாரக மந்திரமாக அமையின் ஒற்றுமை ட்டாயம் ஏற்படும் – நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துளார்.தேர்தலில் வெல்வது ஒன்றே குறிக்கோளாக இருப்பின் ஒற்றுமைசிதைபட்டு விடும், சீர் குலைந்து விடும். ஆகவேதான் நாம் விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும். கொள்கைகளுக்காக ஒன்று சேர சம்மதம் தெரிவிக்கவேண்டும். மக்களின் விடிவு ஒன்றே எமது தாரக மந்திரமாக அமையின்ஒற்றுமை கட்டாயம் ஏற்படும். தம்மை விடக் கெட்டிக்காரர் இவ்வுலகத்தில்யாருமில ;லை என்று சிந்திப்பவர்கள் இவ்வாறான ஒற்றுமையை வளரவிடமாட்டார்கள். தாம் கூறுவதை மற்றவர்கள் முழுமையாக ஏற்கவேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள் அவர்களுடன் எவ்வாறு கூட்டுச் சேரலாம் என்பதைப் பேசியே நாம் முடிவுக்கு வரமுடியும் என வாரம் ஒரு கேள்வி பதிலுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரின் கேள்வி பதிலின் முழுவிபரமும் பின்வருமாறு அமைத்துள்ளது,
வாரத்துக்கொரு கேள்வி
இவ்வாரம் கொரோனா பற்றிய அக்கறை எம்மைப் பீடித்திருக்கும் போது மத்திய அரசாங்க அமைச்சர்களின் வருகையின் பின்னர் தமிழர் பற்றிய ஒற்றுமை சிந்தனைகளும் வெகுவாக மேலோங்கி நிற்கின்றன. ஒற்றுமை பற்றிய கேள்வியொன்று கிடைத்துள்ளது.
கேள்வி – நீங்கள் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் சொல்லும் வல்லமையுடையவர். உண்மையைச் சொல்லுங்கள் – தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேரும் வாய்ப்புண்டா? ஆம் எனில் எவ்வாறு, எப்போது, இல்லையேல் அதற்கென்ன காரணம்?

பதில் – குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக கட்சியினரிடையே ஒத்த கருத்திருப்பின் அதன் பொருட்டு அப்போதைக்கு அவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கட்டாயமாக இருக்கின்றது. ஆனால் நிறுவனமயப்படுத்திப் பயணிப்பதற்குத் தடையாக இருக்கக் கூடியவை சுயநலமும் அகந்தையும் ஆவன. நாம் ஒவ்வொருவரும் எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால் ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால் எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும். ஒன்று சேருவது பற்றி நாங்கள் பேசிக் கொள்வது மக்கள் கோரிக்கையின் நிமித்தமே. அவர்களின் நன்மை கருதியே. மக்கள் தான் ஒற்றுமையை வேண்டி நிற்கின்றார்கள். ஆனால் எமது கட்சிகள் தமது தனித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கவே முனைகின்றார்கள். ஒவ்வொருவருக்கும் கட்சி நலம் மேலோங்கினால் குறிப்பிட்ட விடய ரீதியான ஒற்றுமை வேண்டும் போது ஏற்படலாம், ஆனால் அவர்களிடையே நிறுவனமயமான ஒன்றிணைந்த பயணத்தை ஏற்படுத்துவது சிரமமாக இருக்கும். ஒவ்வொருவரும் புதிய நிறுவனத்தில் தமக்கென ஒரு முக்கிய இடத்தை வகிக்க முனைவார்கள். புதிய நிறுவனத்தைத் தமக்குச் சார்பாகப் பயணிக்க வைக்க முனைவார்கள்.

பல கட்சிகள் நிறுவனரீதியாக ஒன்றிணைய வேண்டுமானால் 03 முக்கிய விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள். தலைமைத்துவம் எனும் போது தலைவரானவர் அறிவு, ஆற்றல், அனுபவம் கொண்டவராகவும் முக்கியமாக அகந்தை அற்றவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திப்பார். இல்லையேல் தன் நலம் பற்றியும் தன் கட்சி நலம் பற்றியுமே சிந்திப்பார். என் கருத்துப்படி சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா அவர்களே இவ்வாறான கூட்டுக் கட்சியொன்றின் தலைமைத்துவத்திற்குப் பொருத்தமானவர். அவரிடம் மேற்கண்ட குணாதிசயங்கள் எல்லாம் கிட்டத்தட்ட இருக்கின்றன.

எனினும் பல மக்களிடையே அவர் பற்றி ஒரு எதிர் மறையான கருத்து இருப்பதை நான் அறிவேன். அதாவது குற்றஞ் செய்தவர்களுக்காக நீதிமன்றங்களில் தெரிபட்டு அவர்களை விடுவிக்க அல்லது அவர்கள் விடுதலை வாங்க அவர் உதவி வருகின்றார் என்ற முறைப்பாடே அது. இரண்டு விடயங்கள் இது பற்றி கருத்தில் எடுக்க வேண்டும். ஒன்று கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையென்று கூற முடியாது. தீர விசாரித்தே உண்மையை அறிய வேண்டும். இரண்டாவது இறைவன் முன்னிலையில் எது உண்மையோ அது தான் சட்டத்தின் முன்பும் உண்மையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கக்கூடாது. பல கட்டுப்பாடுகள், சட்டக் கொள்கைகளின் அடிப்படையில் எமது சான்றுச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு அமைவாக ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால்த்தான் அவரைக் குற்றம் செய்தவர் என்று சட்டம் ஏற்கும். இல்லையேல் விடுதலை செய்துவிடும்.

நான் ஒரு முறை குற்றவியல் வழக்கொன்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சாட்சியின் சாட்சியம் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. வழக்கை நடத்தும் சட்டத்தரணியினதும் எனதும் கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்தார் அந்தச்சாட்சி. அவர் முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. அவரின் சாட்சியத்தை ஏற்று எதிரியை விடுதலை செய்தேன். பின்னர் பல மாத காலத்தின் பின்னர் மேற்கூறிய எதிரியே குற்றத்தைச் செய்தார் என்ற உண்மையை அறிந்து கொண்டேன். சாட்சி தத்ரூபமாகப் பொய் சொல்லியிருக்கின்றார்! எம்மால் அவரின் பொய்யைச் சற்றேனும் அடையாளம் காண முடியவில்லை. சட்டப்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுதலையாகிவிட்டார். இறைவன் சந்நிதியில் அவர் குற்றவாளி.
ஆகவே சட்டத்திற்கு அமைவாகத்தான் குற்றவாளிகளை அடையாளம் காண்கின்றோம்.

சட்டத்திற்கு அமைவாக ஒருவரைக் குற்றவாளியாகக் காணமுடியாத இடத்து எதிரி விடுதலை செய்யப்படுகின்றான். உண்மையை அறிந்த மக்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைகின்றனர். மக்களின் ஆத்திரத்தை ஒரு சட்டத்தரணி சம்பாதித்துக் கொள்கின்றார் என்றால் அவர் சட்டத்திற்கு அமைவாகத் தனது கட்சிக்காரரை குற்றவாளியாக அடையாளம் காண முடியாது என்று மன்றில் எடுத்தியம்பி அதனால் வெற்றி பெற்றதால்த் தான்.சதாசிவம் கொலை வழக்கில் சதாசிவத்தை விடுதலை பெற உதவிய கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அதற்கடுத்து வந்த தேர்தலில் தோற்றார். முன்னர் அவருக்கு எப்பொழுதும் ஆதரவு அளித்து வந்த வெள்ளவத்தைத் தமிழர்கள் அம்முறை கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவுக்கு வாக்களிக்கவில்லை! அவர் மேல் அவ்வளவு ஆத்திரம்!அண்மையில் இதுவரை காலமும் பல கட்சியினரையும் ஒன்று சேர்க்க உதவி புரிந்தவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்களே.

மேலும் மாவை போன்ற ஒரு முக்கிய கட்சியின் தலைவர் கூட்டுக்கும் தலைமை வகித்தால் சிறிய கட்சிகள் வலு இழந்துவிடுவன. முக்கிய கட்சியின் கையே ஓங்கும். அதன் செல்வாக்கே செல்லுபடியாகும். ஆனால் சிறிய கட்சியின் தலைவர்கள் கூட்டுக்குத் தலைமை வகித்தால் பெரிய கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சிறிய கட்சிகளும் அடையாளம் பெறுவன. மாவை எனது பல வருடகால நண்பர். அவரை விடுத்து ஸ்ரீயை நான் சிபார்சு செய்வது நீண்டகால ஒற்றுமை கருதியும் மக்களின் நலன்கருதியும். சம்பந்தன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்ததையும் எவ்வாறு சிறு கட்சிகள் அவரால் புறக்கணிக்கப்பட்டன என்பது பற்றியும் யாவரும் அறிவர்.

அடுத்து கொள்கைகள் எனும் போது சில அடிப்படை விடயங்கள் கட்சித் தலைவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தேசியம் என்பது வெறும் பேசு பொருள் அல்ல. 1987ஆம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்பாட்டில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரம்பரிய தமிழர் வாழ் இடங்கள் என்றும் அவர்களின் தாயகம் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மாறாகக் கருத்துக்களை நாம் வெளியிடுவது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகுவதாக அமையும். ஆகவே வடக்கு கிழக்கு இணைப்பும் அம் மாகாணங்கள் இரண்டும் பாரம்பரியமாகத் தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் என்பதும் எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மேலும் அம் மாகாண மக்கள் கூட்டாகச் சர்வதேசச் சட்டப்படி தன்னாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் எமது தன்னாட்சி சாத்தியமற்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றையாட்சி வேறு ஒன்றிணைந்து ஐக்கியப்படுவதால் ஏற்படும் ஆட்சி வேறு என்பதன் அர்த்தத்தையும் புரிந்து நாம் செயலாற்ற வேண்டும். இவற்றையெல்லாம் பத்துக் கட்சிகளும் புரிந்து கொண்டு ஏற்று நடக்க உடன்பட்டால்த்தான் கூட்டுக்கட்சி உருவாகலாம்.

மூன்றாவது நிறுவனமயப்படுத்தல் பற்றியது. எல்லோரும் தலைமைத்துவத்தைத் தாமே ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே ஒரு தக்க தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு ஒரு ஒன்றிணைந்த கூட்டை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும். ஐந்து கட்சிகள் சேர்ந்து எழுத்து மூல உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பயணிக்கின்றது. அதைப்போல் ஒவ்வொரு கட்சியும் தனது தனிமைத்துவத்தைப் பேணும் அதே நேரம் உடன்படிக்கையின் அடிப்படையில் எவ்வாறு நிறுவன ரீதியாகப் பயணிக்கலாம் என்பதைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கலாம்.

ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் – குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பத்துக் கட்சிகள் இடையே ஒரே கருத்து எழுந்ததெனில் அது சம்பந்தமாக ஒருங்கிணைந்து அப்போதைக்குப் பயணிக்க முடியும். அதற்கு அப்பால் செல்வதாயின் பல விட்டுக் கொடுப்புக்கள் அவசியம். எமது மக்களின் நலன் கருதி நாம் விட்டுக் கொடுப்புக்களுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டி வரும். அடுத்த தேர்தலில் வெல்வது ஒன்றே குறிக்கோளாக இருப்பின் ஒற்றுமை சிதைபட்டு விடும், சீர் குலைந்து விடும். ஆகவேதான் நாம் விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும். கொள்கைகளுக்காக ஒன்று சேர சம்மதம் தெரிவிக்க வேண்டும். மக்களின் விடிவு ஒன்றே எமது தாரக மந்திரமாக அமையின் ஒற்றுமை கட்டாயம் ஏற்படும். தம்மை விடக் கெட்டிக்காரர் இவ்வுலகத்தில் யாருமில்லை என்று சிந்திப்பவர்கள் இவ்வாறான ஒற்றுமையை வளரவிடமாட்டார்கள். தாம் கூறுவதை மற்றவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். அவர்களுடன் எவ்வாறு கூட்டுச் சேரலாம் என்பதைப் பேசியே நாம் முடிவுக்கு வரமுடியும் என தெரிவித்துள்ளார்.(15)