• March 6, 2020
  • TMK Media

வரும் ஆட்சி ‘மீனாட்சியாகவே’ இருக்கும்: நீதியரசர் விக்னேஸ்வரன்

எமது வரும் ஆட்சி மீனாட்சியாகவே இருக்கும் என்று கட்டியம் கூறுகின்றது மீன் என்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஏன் மீன் சின்னத்தை தெரிவு செய்திருக்கிறது என்பதற்கு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் அளித்துள்ள விளக்கம் வருமாறு,

தேர்தல் ஆணைக்குழு தந்த சின்னங்களுள் அதுவும் ஒன்று. அதைத் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு.
1. பாண்டியரின் சின்னம் மீன். வடக்கு கிழக்கிற்கு தென்னிந்தியாவிலிருந்து முதலில் படையெடுத்து வந்தவர்கள் பாண்டியர்கள். பாண்டியரின் வாரிசுகள் பலர் இங்குள்ளார்கள். முக்கியமாக கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் இருப்பவர்கள் அவர்களின் வம்சாவழியினரே.
2. பகவானின் பல அவதாரங்களுள் ஒன்று மச்சாவதாரம்.
3. தமிழர் தாயகமாம் வடக்கு கிழக்கில் மட்டக்களப்பை நாங்கள் அழைப்பது “மீன்பாடும் நாடு” என்று. நான் மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாக இருந்த போது இரவில் என்னைக் கல்லடிப் பாலத்திற்கு அடியில் வள்ளத்தில் கொண்டு சென்றார்கள். அங்கு காது வைத்துக் கேட்ட போது இனிய கானம் கேட்டது. அதனையே மீன்கள் பாடுவதாகக் கூறுவர் என்று நம்புகின்றேன். ஆகவே “மீன்பாடும் நாடு” எமது தமிழர் தாயகம்.
4. வட கிழக்கு கடலோடு தொடர்புடையது. நீண்ட கரையோரம் கொண்டது. அதனையே ஒரு காரணமாக வைத்து மத்திய அரசாங்கம் வடகிழக்கை ஆக்கிரமித்து வருகின்றது. கரையோரம் மீன் வாழும் கடலின் ஓரம். எமது நீண்ட கரைசார் நெய்தல் நிலங்களை நினைவுறுத்துவது மீன்.
5. தமிழர் தம் உரிமைப் போராட்டத்திற்கு உயிர் கொடுத்த பலர் மீனை நம்பி வாழ்ந்து வந்த எம் முன்னோர்களின் வழித்தோன்றல்கள்.
6. மீன் ஆட்சிசெய்த பாண்டிய நாட்டில் மதுரை மீனாட்சி அம்மனை எனக்கு நினைவூட்டுவது மீனாகும். பெண்களின் கண்களை மீனுக்கு உவமை சேர்ப்பார்கள். ஆகவே அழகுக்கு அழகு சேர்ப்பது மீன்.
7. பெப்ரவரி 20ம் திகதிக்கும் மார்ச் 21ந் திகதிக்கும் இடையில் பிறப்பவர்களை மீனராசிக்காரர்கள் என்பார்கள். நாம் தேர்தல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்த காலம் மீன ராசியின் காலமாகும். மார்ச் 5ந் திகதியே எமக்கு இந்த சின்னம் கிடைத்தது. காலத்திற்கேற்ற சின்னம் மீன்.
8. எமது வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவேண்டுமென்றால் கடலுக்கு மேலதிகமாக உள்நீர் நீர்நிலைகளை மேம்படுத்தி உள்நீர் மீன் வளத்தை விருத்தி செய்ய வேண்டும். எமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீள வருவது மீனே.
9. எமது வரும் ஆட்சி மீனாட்சியாகவே இருக்கும் என்று கட்டியம் கூறுகின்றது மீன்.
10. தன்னைப் பிறருக்கு உணவாக்கி தியாகத்தின் சின்னமாக இருப்பது மீனே! மீனுக்கும் எமக்கும் நீண்ட தொடர்புண்டு.

காரணங்கள் போதுமா? அல்லது இன்னும் தரவா?