• July 26, 2020
  • TMK Media

யுத்தம் முடிந்த பின்னர் எம்மை ஆபத்தில் விட்டுவிட்டு ஒதுங்கி பெரும் தவறை இழைத்துவிட்டீர்கள்: இணைத்தலைமை நாடுகள் மீது விக்னேஸ்வரன் அதிருப்தி

நாகரிகம் வளர்ச்சியடைந்து, சர்வதேச மனித உரிமை சட்டங்கள், பிராமணங்கள் என்பவை நிறுவனமயபப்டுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா ஆகியவை இனிமேலும் அலட்சியமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் யுத்தம் நடைபெற்றபோது எமது பிரச்சினையில் தலையீடுசெய்த நாடுகளும், மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஒரு ஆபத்தான நிலைமையில் கைவிட்டுவிட்டுவிட்டு ஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளன என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டுவருகின்ற நிலையிலும், இனப்பிரச்சினை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை அடையும்பொருட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்துமாறு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் சர்வதேச சமூகத்தினை கோருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் இணைந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் காத்திரமான தலையீடு ஒன்றை செய்வதற்கான தார்மீக பொறுப்பை கொண்டிருக்கின்றன என்று வலியுறுத்திய விக்னேஸ்வரன் கருத்துக்கணிப்பு அடிபப்டையிலான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய இடைக்கால தீர்வு ஒன்றை அவசரமாக கொண்டுவந்து மனித உரிமை மீறல்களை தடுப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வலுவூட்டும் நடவடிக்கைகளை இந்த நாடுகள் எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த சர்வதேச விசாரணை மற்றும் இலங்கைக்கு எதிரான பொருளாதார மற்றும் பயண தடைகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காவும் எதிர்காலத்தில் சர்வதேச நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இம்முறை தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்கு ஆட்சியாளர்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்திவருவதாக குற்றம் சாட்டிய விக்னேஸ்வரன் அவை தொடர்பில் தனதுரையில் விளக்கம் அளித்தார்.

விக்னேஸ்வரனின் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் இப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது கட்சியின் செயலாளர் தம்பி சிவசக்தி ஆனந்தன் எமது கூட்டணி பற்றியும் மீன் சின்னம் பற்றியும் மக்களுக்கு இதுவரையில் போதுமானளவு அறிமுகம் செய்து வைத்திருப்பார்.

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுவைக்கப்படும் நாளாக இன்றைய நாள் அமைகின்றது. இன்றைய நாள் மிகவும் ஒரு முக்கியமான செய்தியை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்கள் சொல்லுகின்ற ஒரு நாளாக அமைகின்றது. தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டுவருகின்ற நிலையிலும், இனப்பிரச்சினை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலும் எமது பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை அடையும்பொருட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்துமாறு நாம் சர்வதேச சமூகத்தினை கோருகின்றோம்.

நன்கு, ஆராய்ந்து, சிந்தித்தே நாம் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். சாத்வீக போராட்டம் மட்டுமல்ல கடந்த 10 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சரணாகதி அரசியல் கூட சிங்கள அரசாங்கங்களின் மனக்கதவுகளை திறக்கவில்லை. அவர்களின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் இம்மியளவும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், வரலாற்று பட்டறிவில் இருந்தும், முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் சர்வதேச சமூகத்தின் சமகால அணுகுமுறைகள் அடிப்படையிலும் சர்வதேச சமூகத்திடம் ஒரு கருத்துக்கணிப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி எமது மக்கள் எத்தகைய ஒரு தீர்வினை விரும்புகிறார்கள் என்பதனை அறிந்து நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்துமாறு நாம் அவர்களை கோருவதை தவிர வேறு வழியில்லை. நாகரிகம் வளர்ச்சியடைந்து, சர்வதேச மனித உரிமை சட்டங்கள், பிராமணங்கள் என்பவை நிறுவனமயபப்டுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா ஆகியவை இனிமேலும் அலட்சியயமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. பல் நாடுகளில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஜனநாயக ரீதியான, நடைமுறை சாத்தியமான, சர்வதேச சட்ட பிரமானங்களுக்கு உட்பட்ட மிகச்சிறந்த ஒரு வழிமுறைதான் கருத்துக்கணிப்பு நடத்துவதாகும் . யுத்தம் நடைபெற்றபோது எமது பிரச்சினையில் தலையீடுசெய்த நாடுகளும், மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஒரு ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு ஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளன. 30 வருட கால யுத்த காலத்தில் நாம் இழந்த நிலங்களை விட கூடுதலான நிலங்களை கடந்த 10 வருடங்களில் நாம் இழந்துவிட்டோம். அரச இயந்திரங்கள் யாவும் எமக்கு எதிரான கட்டமைப்பு, கலாசார ரிதியான படுகொலைக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆகவே, தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் உடனடியான தலையீட்டை தற்போது கோருகிறார்கள். கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் இணைந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் காத்திரமான தலையீடு ஒன்றை செய்வதற்கான தார்மீக பொறுப்பை கொண்டிருக்கின்றன. கருத்துக்கணிப்பு அடிபப்டையிலான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய இடைக்கால தீர்வு ஒன்றை அவசரமாக கொண்டுவந்து மனித உரிமை மீறல்களை தடுப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வலுவூட்டும் நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவேண்டும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் கோருகின்றது. இதயசுத்தியுடனான சமாதான முன்னெடுப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் நாம் என்றும் ஆதரிப்போம். ஆனால், அவை இந்தியா அல்லது வேறு ஒரு நாட்டின் மத்தியஸ்துடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இது தமிழ் மக்களின் வரலாற்றுரீதியான ஒரு பட்டறிவின்பாற்பட்ட ஒரு படிப்பினை ஆகும்.

இனி, நான் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றி சிறிது குறிப்பிட விரும்புகிறேன்.
சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் எமது மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேடும் வகையில் அமைந்துள்ளன. அவரது பொய்யான தகவல்களையும் கருத்துக்களையும் எமது மக்கள் நம்பி ஏமாந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், எமது மக்கள் இனியும் ஏமாறப் போவதில்லை. அவர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
ஆட்சியாளர்கள் பெருமளவில் பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாங்கி வாக்குகளை பிரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க சதி செய்வதாக சுமந்திரன் ஒரு கதையை கூறியிருக்கிறார். அரசாங்கம் கோடி கோடியாக பணம் கொடுத்து பல கட்சிகளை வடக்கு கிழக்கில் போட்டியிட வைத்திருக்கின்றது என்பது உண்மை. ஆனால், அதன் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக அல்ல. ஆட்சியாளர்களின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கவனமாக ஆராய்ந்து பார்த்தலே இந்த நடவடிக்கைகளுக்கு காரணம். தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுவதையே அரசாங்கம் விரும்புகிறது என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் சுழஉமநவ ளுஉநைnஉந அல்ல. பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களான ஜி.எல்.பீரிஸ், கெஹேலிய ரம்புக்வல ஆகியோர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெற்கில் தமது கட்சியான சிறிலங்கா பொதுஜென பெரமுனவுமே வெல்லும் என்று வெளிப்டையாகவே கூறியிருக்கின்றார்கள். இது தெற்கில் தமது கட்சியையும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் வெல்ல வைக்கும் ஒரு உளவியல் உத்தி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க்குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றது.

இலங்கையின் பங்கு பற்றுதல் இன்றி சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்கவிருந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் நிலையில், ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பயண தடைகளை ஏற்படுத்தும் நிலையில் எவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் இலங்கையைப் பாதுகாத்துக் கொண்டது என்பது பற்றி முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர னுயடைல ஆசைசழச பத்திரிகைக்கு அண்மையில் வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இலங்கையின் கைகளுக்குத் தாங்களே துணிந்து கொண்டுவந்ததாக அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இது நடைபெற்று இருக்கவே முடியாது. ஆகவே, சர்வதேச நெருக்கடிகளைத் தொடர்ந்து சமாளிக்க ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
மேலும் இவர்களைப் பயன்படுத்தி சலுகை அரசியலூடாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை இலகுவில் விஸ்தரிக்க முடியும் என்பதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு காரணமாகும். நாம் இவற்றிற்கு மசியமாட்டோம் என்பது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் நன்கு தெரியும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டு தடவைகள் ஆதரவு கோரி என்னிடம் ராஜபக்ஷக்கள் தூது அனுப்பியவர்களுக்கு நான் கொடுத்த பதில்களில் இருந்து என்னை நன்றாக எடை போட்டிருப்பார்கள்.

அதனால்த்தான், பலமான சில அமைச்சுக்களை கொடுத்தேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுன விரும்புகிறது. அதேபோலத்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பும் கோத்தாபய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகளை இப்பொழுதிருந்தே செய்து வருகின்றது. இதன் ஒரு எதிரொலியாகத் தான் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை திரு.சுமந்திரன் அவர்கள் எடுத்துக்கூறியிருந்தார்.

அத்துடன், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐனநாயகப் போராளிகள் கட்சியினர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற வைப்பதற்காக ஆட்சியாளர்களினால் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தயவில் வெளிப்படையாகவே இயங்கும் ஜனநாயக போராளிகளின் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வெளிப்படையாக கைகோர்த்திருப்பது தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மகிந்த-கோத்தா அரசில் இணைவதற்காக முன்கூட்டியே உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே எட்டப்பட்டிருப்பதையே கட்டியம்கூறி நிற்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச சுயாதீன விசாரணை பற்றி எதையும் தெளிவாக குறிப்பிடாமையும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே நாட்டுக்குள்ளே தான் தீர்வு என்பதை நாம் வெளிப்படையாக விஞ்ஞாபனத்தில் சொல்லியும், சமஷ;டி என்றால் பிரிவினை என அந்தப் பக்கத்தில் ராஜபக்சக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சுமந்திரனே தனது வாயால் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறத்தில் பொதுஜன பெரமுன கூடுதல் வாக்குகளை பெறுவதற்கு உதவும் அதேவேளை, எதுவுமே இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்கள் பிழையாகப் பார்ப்பதை தவிர்ப்பதற்கான அரசாங்கத்தின் உதவியாகவும் இது இருக்கக் கூடும்.
சிங்கள மக்களில் கணிசமானோர் இணங்காத எந்தத் தீர்வும் நிலையானதல்ல. இதைச் சொல்லாமல் அரசியல் செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். என்றும் சுமந்திரன் கூறி இருக்கிறார். இதன்மூலம் சுமந்திரன் என்ன கூறுகிறார் என்றால், சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வினைத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரும் என்பதைத்தான். தமிழ் மக்களுக்கு இந்தத் தீர்வுதான் வேண்டும் என்று தமிழ் மக்களின் வரலாறு, பூர்வீகம், சட்டரீதியான சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை எடுத்துக்கூறி சிங்கள மக்களை அதற்கு இணங்க வைக்க வேண்டும் என்று சிந்திக்காமல், சிங்கள மக்கள் இணங்கும் ஓர் தீர்வினை எமது மக்கள் மத்தியில் திணிக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கபட நாடகத்தை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் யோசனையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒற்றை ஆட்சிக்குப்பட்ட தீர்வுக்கும் ஒத்துக்கொண்டதுடன் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தவும் தவறியது.

ஆனால், எமது அணுகுமுறை என்னவென்றால் சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வை அல்ல சிங்கள மக்களை நாம் இணங்கச்செய்யும் ஒரு தீர்வினை நாம் பெறுவது பெற்றுக் கொள்வதுதான். அதற்காகத்தான் நான் எதற்கும் அஞ்சாமல் எமது பூர்வீகம், வரலாறு, எமது சுயநிர்ணய உரிமை, நாம் ஏன் ஒரு தேசம், நாம் ஏன் சிங்களவர்களை விட இந்த நாட்டுக்கு கூடுதல் சொந்தக்காரர் என்பவற்றை எல்லாம் கூறிவருகின்றேன். அவ்வாறு கூறியதால்த்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிசார் வந்து என்னைக் கேள்வி கேட்டனர்.
திரு.சுமந்திரன் பின்வறுமாறும் கூறியிருக்கிறார்: ‘அந்தப் பக்கத்தில் ஈழம் பிடித்துத் தருவோம் என்ற உணர்ச்சி அரசியல் செய்பவர்களும் சமாதானமான வழிகளிலே ஒரே நாட்டுக்குள்ளே தான் அவர்கள் தீர்வை எதிர்பார்ப்பதை எம் மக்கள் மத்தியில் தெளிவாகச் சொல்லப் பயப்படுகின்றார்கள் என்றார். மேலும் அவர் எமது உரிமை, உரித்துப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் உறுதி கொண்டவர்கள் இந்த உண்மைகளை வெளிப்படையாகக் கதைக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் நாம் சமஷ;டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் சர்வகட்சி இணக்கப்பாட்டை எட்டி இருக்கின்றோம். அரசியலமைப்பு வரைபொன்று இருக்கிறது. அதை நாம் அரசியலமைப்பாக மாற்ற வேண்டும். அதற்கான ஆணையை தமிழ் மக்கள் எமக்குத் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஒரே நாட்டுக்குள் என்று சுமந்திரன் கூறுவது ஒற்றை ஆட்சிக்குள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உத்தேச அரசியல் யாப்பு வரைபில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வுக்கு தான் இணங்கியது என்பது எமது பல்கலைக்கழகங்களின் கலாநிதிகள், பேராசிரியர்களினால் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுமந்திரனோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றவகையில் விதண்டாவாதம் செய்து வருகின்றார். ஏகீய என்ற சிங்கள சொல்லும் எல்சத் என்ற சிங்களச் சொல்லும் ஒரே பொருளுடையன என்று கூறப்பார்க்கின்றார்.

இலங்கையில் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட எந்த தீர்வும் அர்த்தம் உள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே வரலாறு எமக்குப் புகட்டும் பாடம். ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வினை எமது மக்களின் மீது திருட்டுத்தனமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு திணிக்கக்கூடாது. அப்படியானால், இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு மக்களிடம் ஆணை கேட்டிருக்கவேண்டும். இல்லாதுவிட்டால், தமக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை எமது மக்களிடமே அறிந்துகொள்ளும் கருத்துக்கணிப்பு ஒன்றுக்கு செல்ல முன்வர வேண்டும். இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. இதனைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். ஒன்றில் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ;டி அடிப்படையிலான ஒரு தீர்வினை கொண்டுவர வேண்டும் அல்லது எமது மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து அந்த அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிக்கவேண்டும். எமது மக்கள் ஒற்றை ஆட்சிதான் வேண்டும் என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்வோம். மக்கள் சமஷ;டி வேண்டும் என்றால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லை வேறு ஒரு மேலான தீர்வுதான் வேண்டும் என்றால் அதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து, வடக்கு – கிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தாத தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபை அரசியலமைப்பாக மாற்றுவதற்கான ஆணையை சுமந்திரன் கோரியிருப்பதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே. இதன்மூலம், இறுதி தீர்வு, பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட, வடக்கு -கிழக்கு இணையாததாகவே இருக்கப்போகின்றது என்பது நிரூபணமாகின்றது. ஆனால், இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ;டி தீர்வினை கவர்ச்சிகரமான வகையில் முன்மொழிந்து மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தேச அரசியலமைப்பு வரைபின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியவர்களில் கலாநிதி குமாரவடிவேல் குருபரனும் ஒருவர். இதன் காரணமாகவும், இனப்படுகொலை தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு எதிராக எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை காப்பற்றும் வகையில் செயற்பட்டது என்பதை எடுத்துக் கூறியமையும் குருபரனுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் அநீதி இழைக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டும் காணாததும் போல இருந்துவிட்டமைக்கு காரணமாகும். எமது நீண்ட போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்ததே எமது யாழ் பல்கலைக்கழகம் தான். இன்று அதன் நிலையை பாருங்கள். அரசினாலும் அரசினால் உள் நுழைக்கப்பட்ட முகவர்களின் செயற்பாட்டாலும் மூளைசாலிகள் வெளியேறி வருகின்றனர். தமிழ் மக்களின் நீதிவேண்டி செயற்பட்ட சிவில் சமூக அமையத்தின் குரலாக ஒலித்த குருபரன் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியை துறக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். தாமாகவே திரட்சி பெற்று அநீதிகளுக்கு எதிராக வெகுண்டெழும் மாணவர் சமுகமும் மாணவர்களின் போராட்டங்களை தட்டிக்கொடுத்து வழிநடத்தும் பேராசிரியர் சமூகமும் இன்று செயலற்று நிற்கின்றன. ஒரு சமுகத்தின் மூளையின் பிறப்பிடமாகிய பல்கலைக்கழகத்துக்கே இந்த நிலை எனில் அச் சமூகத்தின் நிலை என்ன என்பதை உய்த்துணர்ந்து பார்க்க முடியும். இது எமது இனத்தின் இன்றைய நிலையின் ஒரு சிறு பக்கத்தினை மட்டும் எடுத்துக்காட்டுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சலுகை அரசியலும் ஓரிருவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே இன்றைய தமிழ் மக்களின் அவல நிலைக்கு காரணம். மிகப்பெரும் அதிகாரத்தை தனது கையில் வைத்திருந்த தம்பி பிரபாகரன் கூட ஒருபோதும் தனது அதிகாரத்தை தான்தோன்றித்தனமாக தனது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப பயன்படுத்தியது கிடையாது. தீர்வு விடயத்தில் நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அவர் உருவாக்கியிருந்தார். அதேபோல, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாடுகளுக்காக நிறுவனங்கள், கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றை சுயாதீனமாக செயற்பட அனுமதித்திருந்தார். ஆனால், கடந்த 10 வருடங்களில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே மேற்கொண்டுவந்திருந்தனர். அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளில் மக்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டனர். அரசியல் தீர்வு வரைபு தயாரிக்கும் விடயத்தில் வட மாகாண முதலமைச்சராக இருந்த என்னைக்கூட அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை. அந்தளவுக்கு சர்வாதிகாரத்தனமாக அவர்கள் செயற்பட்டுள்ளனர். எந்த ஒரு தீர்மானங்களை எடுக்கும் போதும் அவர்களுக்கு சில அளவுகோல்கள் இருந்தன. அவற்றில் முதலாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாகும். இரண்டாவது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதாகும். மூன்றாவது சிங்கள மக்கள் தமது முடிவுகளை சந்தேகத்துடனும் தவறாகவும் பார்க்கக்கூடாது என்பதாகும். நான்காவதாகவே தமிழ் மக்களின் நலன்கள் பற்றிக் கொஞ்சமேனும் செலுத்த வேண்டும் என்பது. நான் இதை வெறும் பேச்சுக்காக கூறவில்லை. கூட்டமைப்பின் ஒவ்வொரு தீர்மானங்களையும் நீங்கள் ஆராய்ந்துபார்த்தால் உங்களுக்கு இந்த உண்மை புரியும். எமது சமூகத்தை கட்டமைப்புக்கள் ரீதியாக பலப்படுத்தி பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் உள்வாங்கி செயற்படும் எந்த முயற்சிகளையும் அவர்கள் செய்யவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து நிதியை பெற்று அபிவிருத்தி செயற்பாடுகளை நான் முன்னெடுப்பதற்காக முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்துவதற்கு நான் முனைந்த போது அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதற்கு காரணம் நான் இனப்படுகொலை தீர்மானத்தினை நிறைவேற்றி அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டமையே ஆகும்.

எமது செயற்பாடுகளோ நிறுவன ரீதியான கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படவிருக்கின்றது. நிறுவனமயப்படுத்தல் என்னும் பொழுது அரசியல் தீர்வு விடயம் சரி, சமூக, பொருளாதார மேம்பாட்டு விடயங்களும் சரி எதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கான செயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனி ஒருவரில் தங்கி இருக்காமல் அந்த நோக்கங்கள் தொடர்பிலான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே பெற்றுத்தரும்.

அதேபோல, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வினைக் காண்பதற்கு நாம் முன்வைக்கும் யோசனைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதாகவும் முரண்பாட்டு கோட்பாடுகளுக்கு அமைவானதாகவுமே இருக்கின்றன. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்பட்ட நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளே. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் அழிப்பதையே குறியாகக்கொண்டு செயற்படும் இலங்கை அரசு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் வழங்கப்போவதில்லை என்பதையும் சர்வதேச உத்தரவாதம் இன்றிய எந்த உடன்படிக்கையையும் இலங்கை அரசு மதிக்கப்போவதில்லை என்பதையும் யுத்தத்துக்கு முந்திய வரலாறும், யுத்த கால வரலாறும், யுத்தத்துக்கு பிந்திய வரலாறும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. ஆகவே தான் ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம். அதேபோல, இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது, ஏன் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பவற்றை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு அவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காகவே சர்வதேச விசாரணையை நாம் கோருகின்றோம்.

ஆகவே, வடக்கு கிழக்கில் வாழுகின்ற எமது அன்புக்கினிய மக்களே! தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற விதியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக ஆவணி 5, 2020 திகதி அன்றைய பாராளுமன்ற தேர்தல் அமைகிறது. உங்கள் வாக்குகள் தான் அந்த விதியை எழுதப்போகின்றன. நீங்கள் எழுதும் விதி வடக்கு- கிழக்கில் ‘மீனாட்சி’ மலர்வதற்கானதாக இருக்கட்டும்.

இறுதியாக ஒரு வேண்டுகோள், இம்முறை தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் கள்ள வாக்குகள் போடுவதை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகவே, மக்களே விழிப்பாக இருந்துகொள்ளுங்கள். உங்களை சுற்றி என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானியுங்கள். குறிப்பாக இளைஞர், யுவதிகள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். உங்கள் கைகளில் இருக்கும் கமெரா தொலைபேசிகளை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் செயற்பாடுகளை ஆதாரப்படுத்துங்கள். அம்பலப்படுத்துங்கள். வாக்குகள் என்னும் செயற்பாடுகளை கண்காணிக்க எமக்கு உங்களின் உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறி ஆகஸ்ட் 5ந் திகதி தேர்தலில் மீனுக்கு வாக்களியுங்கள் என்று கூறி என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன்.