விக்கி மீதான அழுத்தம்
காலைக்கதிர் பத்திரிகையில் 25.07.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட ஆசிரியர் தலையங்கம்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் நேற்றுப் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்ட விடயம் ஒரு சிறு விசாரிப்பு என்று விட்டுவிடக் கூடிய விவகாரம் அல்ல.
ஏனென்றால் நீதியசரர் விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்ட விடயம் ஆழமானது. அதற்குள் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.
கொழும்புத் தலைமையகப் பொலிஸில் இருந்து விசேடமாகப் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் சரித்திரம் குறித்தும், அதில் தமிழர்களின் முக்கிய வகிபாகம் குறித்தும் நீதியரசர் தெரிவித்த ஒரு கருத்துக் குறித்தே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
சிங்களவர்களுக்குத் தவறான வரலாறு போதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள நீதியரசர் விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழர்களுக்கும் பெளத்தத்துக்கும் உள்ள தொடர்பை விவரித்திருக்கின்றார்.
“”சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே வடக்கும் கிழக்கும் தமிழர்களின் வாழ்விடம். பெளத்தத்தை முதன் முதலில் தமிழர்களே ஏற்றிருந்தனர். அப்போது சிங்கள மொழி வழக்கத்திற்கே வந்திருக்கவில்லை.
“”சிங்கள மொழி கி.பி. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில்தான் மொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்பிருந்தே இலங்கைத் தீவில் தமிழினமும் மொழியும் நிலை கொண்டிருந்தன.
– இந்தச் சாரப்பட தாம் எழுதிய கேள்வி – பதில் அறிக்கை குறித்தே நீதியரசர் விக்னேஸ்வரன் விசாரிக்கப்பட்டிருக்கின்றார்.
ஆக, அந்த அறிக்கை அவர் வெளியிட்டதுதானா என்ற உண்மைத் தன்மை குறித்த பூர்வாங்க விசாரணையே இப்போது நடத்திருக்கின்றது.
கிழக்கில் தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கானது என்ற பெயரில் தனியான ஜனாதிபதி செயலணி ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட போதே, பலவித முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகின என்பது தெரிந்ததே.
கிழக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் சிங்கள, பெளத்த புராதன தலங்களாகக் காட்டப்பட்டு கபளீகரம் செய்யப்படும் – அல்லது ஆக்கிரமிக்கப்படும் – என்று பல தரப்பாலும் எச்சரிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தை பெளத்த, சிங்களப் பேரினவாதம் சூறையாடுவதற்கான ஒரு திறவுகோலே இந்த விசேட ஜனாதிபதி செயலணி என்று தமிழர் தரப்பில் ஊகம் தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தை பெளத்த, சிங்கள புராதன மையங்களாக மாற்றும் நரித் தந்திரத் திட்டத்துக்கு ஆப்படிக்கும் விதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து அமைந்ததாலேயே அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்களில் பெளத்த சின்னங்களை புராதன அடையாளங்களாக மீட்பதன் மூலம் அப்பிரதேசங்களை பெளத்த, சிங்கள இடங்கள் என்று காட்டலாம் என்பதுதான் கொழும்பின் திட்டம்.
ஆனால், சிங்களம் ஒரு மொழியாகப் பரிணமிக்க முன்னரே இந்த மண்ணில் தமிழர்கள் பெளத்தத்தையும் ஒரு மதமாக ஏற்று, அதைக் கைக்கொண்டிருந்தனர் என்ற நீதியரசரின் கூற்று ஏற்று அங்கீகரிக்கப்படுமானால் –
தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய – அல்லது மீட்கப்படக்கூடிய – பெளத்த சின்னங்கள், மரபுரிமைச்சான்றுகள், தொன்மைப் பொருள்களின் மீது சிங்களம் தனி உரிமையோ, தனிப் பாத்தியமோ கொண்டாடமுடியாது என்ற நிலைமை ஏற்பட்டு விடும்.
அதனால்தான் நீதியரசர் விக்னேஸ்வரன் மீது கொழும்பின் சீற்றம் திரும்பியிருக்கின்றது போலும்.
இப்படி உண்மையைப் பட்டவர்த்தனமாகக் கூறியதன் மூலம், தமிழர் தேசத்தை சிங்கள, பெளத்தத்தின் புராதன இடங்களாகக் காட்ட முயன்ற பேரினவாத மேலாதிக்கத்தின் முயற்சிக்கு ஆப்பு வைத்த நீதியரசரின் நடவடிக்கையை, தேசிய இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வின்மையையும், முரண்பாட்டையும், குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் முயற்சியாக அர்த்தம் பண்ணி அதன் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டாபய அரசு தயாராகக் கூடும்.
“”மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று எண்ணினால், தயவு செய்து உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என ஜனாதிபதியையும் மற்றைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறான செயல்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனத் தெரிந்து கொண்டுதான் அரசியலுக்குள் நுழைந்தேன்” – எனக் கூறுகின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.
சரித்திர உண்மைக்காக அவர் உறுதியாக நின்றால் தமிழினம் அவருடன் நிற்கும்.