விக்னேஸ்வரனின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி தீவிர விசாரணை: கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவிப்பு
உயர்மட்ட புலனாய்வுக் குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் கடும் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணையை தாம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று காலை திடீரெனச் சென்ற காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவர் தலைமையிலான புலனாய்வுக் குழுவினரே இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.
கடந்த மார்கழி மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாகவே இவர்கள் விசாரணையை அமைந்திருந்தது. கேள்வி – பதில் வடிவில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட அறிக்கை சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை அமைந்திருப்பதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து செல்லும்போது வடக்கு-கிழக்கு மக்கள் அவ்வாறு செல்வதை எது தடுக்கிறது என்பதே இந்த கேள்வி. இதற்கு விக்னேஸ்வரன் அளித்த பதிலில் தமிழ் மக்களே இலங்கையின் சுதேச குடிகள் என்றும் நீர்கொழும்பில் இருந்து வடக்கு -கிழக்கு வரை அவர்களின் செறிவாக வாழ்ந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருகாலத்தில் மேற்கு அவுஸ்திரேலியா முதல் கிழக்கு ஆபிரிக்கா வரை இந்திய உபகண்டதையும் உள்ளடக்கி அகன்று காணப்பட்ட லெமூரியா கண்டத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டத்துடன் இலங்கையின் சுதேசிகளான தமிழ் மக்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிங்கள மொழி மூலம் அடையாளப்படுத்தப்பட்ட சிங்கள மக்களின் வரலாறு 6 ஆம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ( 1300 முதல் 1400 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ) இருந்தே ஆரம்பிக்கிறது என்றும் நீதியரசர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். சிங்கள மொழி தோற்றம் பெறுவதற்கு முன்னர் பௌத்தம் இலங்கையில் இருந்ததாகவும் தமிழர்களே அவ்வாறு பௌத்தத்தை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவு நூற்றாண்டுகாலம் இலங்கையில் வாழ்வதாகவும் சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களுடனும் அவர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழ் பேசும்க் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் செறிந்துவாழ்வதாகவும் அவர்களின் வாழ்க்கை வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுடன் பிணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் 200 வருடங்களுக்கு உட்பட்ட வரலாற்றையே மலையக மக்கள் கொண்டிருப்பதாகவும் வடக்கு -கிழக்குக்கு வெளியே வாழும் அவர்கள் சிங்களத்தை கற்பதிலோ சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதிலோ சிரமம் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழ் மக்களின் வரலாறு தமிழின் வரலாறு அவர்களின் சிறப்பு ஆகியவை தொடர்பில் பல்வேறு வரலாற்று தகவல்களுடன் 5 பங்கங்களில் விக்னேஸ்வரன் இந்த கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தார்.
விக்கினேஸ்வரனின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துமாறு விசாரணைக்காக வந்திருந்த காவல்துறை புலனாய்வு அதிகாரிக்கு உயர் மட்டம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக விக்கினேஸ்வரனிடம் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி கேள்வி எழுப்பினார்.
உடனடியாகவே இது தொடர்பான ஆவணத்தை கையளித்த விக்கினேஸ்வரன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் விக்கினேஸ்வரன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த காவல்துறை புலனானாய்வு அதிகாரி, தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார்.
விக்னேஸ்வரன் ஆங்கிலத்தில் அளித்த கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது: