இனியும் தாமதம் வேண்டாம்; தலையிடுவது உங்கள் தார்மீக கடமை- சர்வதேசத்திடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்
நாகரிகம் வளர்ச்சியடைந்து, சர்வதேச மனித உரிமை சட்டங்கள், பிராமணங்கள் என்பவை நிறுவனமயபப்டுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா, சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா ஆகியவை இனிமேலும் அலட்சியமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் யுத்தம் நடைபெற்றபோது எமது பிரச்சினையில் தலையீடுசெய்த நாடுகளும், மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஒரு ஆபத்தான நிலைமையில் கைவிட்டுவிட்டுவிட்டு ஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளன என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டுவருகின்ற நிலையிலும், இனப்பிரச்சினை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை அடையும்பொருட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்துமாறு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் சர்வதேச சமூகத்தினை கோருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.