தமிழ் மக்கள் கூட்டணி ஸ்தாபகரின் சுருக்கமான வரலாறு

நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் (C.V.Wigneswaran) (க.வி.விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதியரசரும், வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞராகக் கடமையாற்றி நீதித் துறைக்குள் அழைக்கப்பட்டவர், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்ற நீதவான்/நீதிபதியாகவும், மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் நீதியரசராகவும் பணியாற்றியவர்.

இவர் 2013 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 23 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடிவடையும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார். தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்
உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர் நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள். இவரது பெற்றோர் கனகசபாபதி விஸ்வலிங்கம், ஆதிநாயகி ஆகியோர். இவர்கள் யாழ்ப்பாணம், மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர். இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். நீதியரசர் திரு.விக்னேஸ்வரனுக்கு இரு சகோதரிகள். ஒருவர் காலமாகிவிட்டார். தற்போது இருக்கும் சகோதரி இங்கிலாந்தில் வசிக்கின்றார்.

தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் இவர் பயின்றார். தனது 10வது அகவையில் நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு றோயல் தொடக்கப் பாடசாலையில் சேர்ந்து பின்னர் றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமானிப் பட்டமும் (சரித்திரம், தமிழ் இலக்கியம், சட்டம்) பேராதெனிய இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளஞ் சட்டமானிப் பட்டமும் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர் இறுதிப் பரீட்சைகளில் சித்திபெற்று சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். சட்டக்கல்லூரி சட்ட மாணவர் சங்கத்தின் தலைவராக 1962ல் பதவி வகித்தார். இவரின் பின்னர் ஒரு தமிழர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட 48 வருடங்கள் ஆகின. மற்றும் 1971ம் ஆண்டில் சட்டத்தைத் தமிழில் பயிற்றுவித்த முதல் ஆசிரியர் இருவருள் இவர் ஒருவராவார். இவர் சட்டத்தைத் தமிழில் பயிற்றுவித்த போது வேறெங்கணுமே சட்டம் தமிழில் பயிற்றுவிக்கப்படவில்லை.

நீதித்துறையில் பணி
1979 மே 7 இல் இவர் நீதித்துறையில் இணைந்தார். ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். ஜனவரி 1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார். அப்போது நீதிபதிகள் சங்கத் தலைவராகப் பணிபுரிந்தார். 1988 ஆம் ஆண்டில் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார். மேல் மாகாணத்தில் ஐந்து மேல் நீதிமன்றங்களின் பிரதம நீதிபதியாகக் கடமையாற்றினார். அப்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராகக் கடமையாற்றினார்.

1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரானார். 2001ல் உச்ச நீதிமன்ற நீதியரசராகத் தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் மும்மொழிகளிலும் அவரின் உச்ச நீதிமன்ற வரவேற்பின் போதான பேச்சை இறுத்தார். அந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அவர் ஆற்றிய உரை முக்கியமானதாகும். 200 வருட கால உச்ச நீதிமன்ற வரலாற்றில் மும் மொழிகளிலும் உச்ச நீதிமன்ற வரவேற்பு நிகழ்வில் பேசிய ஒரே ஒரு நீதியரசர் அவரேயாவார்.

2004ல் ஒக்டோபரில் அவர் இளைப்பாறினார்
சமூக வாழ்க்கை 1965ல் சர்வமத சம்மேளனத்தை உருவாக்கிய 41 பேரில் இவரும் ஒருவர். இன்று இவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றார். அதன் துணைக் காரியதரிசியாக அப்போது கடமையாற்றினார். கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக 15 ஆண்டுகள் கடமை புரிந்தார்.

அரசியல் வாழ்க்கை
2013 ஜூலை 5 இல் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்தார். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் இன்று வரையில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 அன்று வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் பதவியேற்றார்.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் என்ற அரசாங்கம் பதவிக்கு வந்த பின் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களான திருவாளர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகிய தமிழ்த் தேசிய கொள்கைகளுக்கு முரணான விதத்தில் செயற்படுவதாகக் கூறி அவர்களுடன் முரண்பட ஆரம்பித்தார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் உண்மையான தமிழ்த் தேசியவாதிகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ந் திகதி வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தினை சபையானது ஒருமனதாக நிறைவேற்றியபின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. 2017 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவருக்கு எதிராக கொண்டுவர எத்தனித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வடக்கு மாகாண இளையோர்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் முறியடிக்கப்பட்டது.

2018 அக்டோபர் 23 இல் முதலாவது வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார். கொள்கை அடிப்படையில் செயற்படும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதமாக 2020 பெப்ரவரி 9 ஆம் திகதி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதிய மாற்று கூட்டணி ஒன்றை அமைத்தார். அவர் குறித்த பாராளுமன்றத் தேர்தலில் மீன் சின்னத்தின் கீழ் ஆறாம் இலக்கத்தில் இம்முறை போட்டியிடுகின்றார்.

குடும்பம்
நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் கட்டிடத் திணைக்களப் பணிப்பாளர் திரு.தம்பையா குணரத்தினத்தின் மூத்த மகளான இந்திரகுமாரியை மணம் முடித்தார். அவர் அமெரிக்காவில் மிசூரியிலும் கொழும்பிலும் மொன்டசூரி ஆசிரியையாகக் கடமை புரிந்தவர். அவர்களுக்கு இரு புத்திரர்கள். சட்டத்தரணியான மூத்த புத்திரர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வாசுதேவ நாணயக்காரவின் மகளை மணம் முடித்துள்ளார். நிர்வாகக் கணக்காளரான இளைய மகன் கேசரலால் குணசேகராவின் மூத்த சகோதரரின் புத்திரியை மணம் முடித்துள்ளார்.

திருமதி இந்திரகுமாரி விக்னேஸ்வரன் அவர்கள் 1992ம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு காலமானார்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் ஜிட்டு கிருஷ் ணமூர்த்தி போன்ற உலக தத்துவ ஞானிகளுடனும் சுவாமி சாந்தானந்த சரஸ்வதி போன்ற சுவாமிகளுடனும் நல்லுறவைப் பேணி வந்துள்ளார். நீதியரசர் விக்னேஸ்வரன் ஆங்கிலத்தில் ‘Some Thoughts on Hinduism’ என்ற நூலையும் தமிழில் ‘சலனமும் சரணமும்’, ‘இந்து சமய சிந்தனைகள்’ மற்றும் ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல்களையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார்.