தமிழ் மக்கள் கூட்டணியின் சுருக்கமான வரலாறு

தமிழ் மக்களின் உரிமைகளை அரசியல், ஜனநாயக மற்றும் ராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக வென்றெடுக்கும் நோக்கத்தில் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் அதன் இலக்கில் இருந்து பிறழ்ந்து திசை மாறி பயணம் செய்ய ஆரம்பித்தது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கோ அல்லது இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் துன்ப, துயரங்களை போக்குவதற்கோ எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் அதனால் மேற்கொள்ளமுடியவில்லை. பதவி மோகம், சலுகை மற்றும் சரணாகதி அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றுடன், ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து செயற்பட்டமையுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல தோல்விகளுக்கும் தவறுகளுக்கும் காரணங்களாக அமைந்தன. இந்த நிலையில், வட மாகாண சபையின் முதலமைச்சராக செயற்பட்ட நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கவேண்டும் என்று வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தனது முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைந்த கையேடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 2018 அக்டோபர் 24 அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. பல புத்திஜீவிகளும், இளைஞர் யுவதிகளும், பொது மக்களும் கட்சியில் இணைந்துகொண்டனர். புலம்பெயர் தமிழ் மக்களும் தமது ஆதரவை வழங்கினர். கொள்கை அடிப்படையில் செயற்படும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைத்து 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி உருவாக்கிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி ஒரு முக்கிய பங்காளி கட்சியாகும்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு ஆராயப்பட்டு முன்னெடுக்கப்டும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறுவனமயப்படுத்தல் என்னும்பொழுது அரசியல் தீர்வு விடயம் சரி, சமூக, பொருளாதார மேம்பாடு சரி எதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கான செயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனி ஒருவரில் தங்கி இருக்காமல் அந்த நோக்கங்கள் தொடர்பிலான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படுவதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் கூட்டணி செய்துவருகின்றது. தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார, கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழிவகுக்கும் என்பது எமது நம்பிக்கை.